ராம்பிரபு என்கின்ற ராஜேந்திரன் என்பவர் ஆஸ்திரேலியாவில் இரிடியத்தில் முதலீடு செய்துள்ளதாகக் கூறி பல கோடி ருபாய் மோசடி செய்ததாக அவர் மீது விருதுநகர் காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ஜாமீன் வழங்கக்கோரி ராம்பிரபு என்கிற ராஜேந்திரன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் ராம்பிரபு என்கின்ற ராஜேந்திரனுக்கு  ஜாமீன் வழங்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து, பல்லாவரத்தை சேர்ந்த முகமது தமீம் என்பவர் இடையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.


அதில் "குற்றம் சாட்டப்பட்ட ராம்பிரபு @ ராஜேந்திரன், இரிடியத்தை ஆஸ்திரேலியாவிற்கு விற்பனை செய்துள்ளதாகவும், அதற்காக தனக்கு வர வேண்டிய 10 ஆயிரம் கோடி ரூபாய் பணத்தை பெறுவதற்கு, ரிசர்வ் வங்கி மூலமாக சில நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். அதற்கு 133 நபர்களை இதில் உறுப்பினர்களாக இனைத்தால் மட்டுமே பணத்தை பெற முடியும் என்று கூறினார். அதோடு, அதற்கான பரிவர்த்தனை நடைமுறைக்கு எனக்கூறி பத்து லட்ச ரூபாயை செலுத்தினால், ஒரு கோடி ரூபாயாக திருப்பி கொடுக்கிறேன் என்று கூறி என்னிடம் இருந்து 10 லட்சம் ரூபாயை பெற்றுக்  கொண்டார். இதேபோல் 133 நபர்களிடம் இருந்தும் பணத்தை  பெற்றுள்ளார்.


அதன் பின்னரே அவர் இதுபோன்ற பல நபர்களிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு, மோசடி செய்துள்ளது தெரியவந்தது. மேலும் இவர் சமூக சேவை செய்வது போல முன்னாள் பிரதமர்கள் மற்றும் மோடியின் பெயரை பயன்படுத்தி  ஏமாற்றி வருவதும் தெரிந்தது.  குற்றம்சாட்டப்பட்ட ராம்பிரபு என்கின்ற ராஜேந்திரன் தரப்பில் இருந்து இந்த வழக்கை திரும்பப் பெற வேண்டும் என தொடர்ச்சியாக மிரட்டல்கள் வந்து கொண்டிருக்கிறன. மேலும் ராம்பிரபு என்கின்ற ராஜேந்திரன் இந்த வழக்கின் சாட்சியங்களை அழிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்"என கூறியிருந்தார்.


இந்த வழக்கை விசாரித்த நீதிபதி முரளி சங்கர், மனுதாரர் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் 20 லட்ச ரூபாயை பிணையத் தொகையாக செலுத்த வேண்டும், இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை பிணையமாக வழங்க வேண்டும் மற்றும் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.




3 வயது குழந்தையை குத்தி கொன்ற வழக்கில் பெண்ணுக்கு ஆயுள் தண்டனை உறுதி 


திருச்சி பாலக்கரை அருகே உள்ள துரைச்சாமிபுரத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவர் செல்போன் ரீசார்ஜ் கடை வைத்திருந்தார். இவரது மனைவி லெட்சுமிபிரபா கடையை கவனித்து வந்தார். இந்த கடையில் துரைச்சாமிபுரத்தைச் சேர்ந்த ரோஸ்லின் பாக்கியராணி என்ற பெண் வேலை பார்த்துள்ளார். கடையில் இருந்து பணத்தை திருடியதால், ரோஸ்லினை வேலைக்கு வரவேண்டாம் என லெட்சுமிபிரபா கூறி உள்ளார். 


இதனால் ஆத்திரமடைந்த ரோஸ்லின் அவரை பழிவாங்க திட்டமிட்டுள்ளார். கடந்த 16.7.2016 ஆம் ஆண்டு பள்ளியில் இருந்து வீட்டுக்கு வந்த லெட்சுமியின் 3வயது மகன் சிரீஸ் என்ற சிறுவனை கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த திருச்சி முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றம் கடந்த 2019ஆம்  தீர்ப்பளித்தது. அதில், ரோஸ்லின் பாக்கியராணி மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு ஆயுள் தண்டனையும், 4 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. இதை உத்தரவை எதிர்த்து ரோஸ்லின் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சுப்ரமணியன், சதீஷ்குமார் அமர்வு கீழமை நீதிமன்றம் வழங்கிய ஆயுள் தண்டனையை  உறுதி செய்து உத்தரவிட்டனர்.