சேலம்: கெங்கவல்லி அருகே 2 குழந்தைகளை வெட்டிக்கொன்ற தந்தையை போலீசார் கைது செய்த நிலையில், மனைவிக்கும், இன்னொரு குழந்தைக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் நெய்வேலியில் உள்ள அவரது கள்ளக்காதலியிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.


சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகேயுள்ள 74 கிருஷ்ணாபுரம் ஊராட்சி காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் அசோக் குமார். இவரது மனைவி தவமணி. இவர்களுக்கு விஜயதாரணி, அருள்பிரகாஷினி, அருள்பிரகாசம் ஆகிய குழந்தைகள் இருந்தனர். அசோக்குமார் நெய்வேலியில் தங்கியிருந்து சரக்கு ஆட்டோ ஓட்டிவந்தார். அங்கேயே தங்கியிருந்தால் அப்பகுதியை சேர்ந்த பெண்ணுடன் தகாத உறவு இருந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மனைவி தவமணி, கணவரை கண்டித்துள்ளார். அதே நேரத்தில் மனைவி தவமணி மீதும் கணவர் அசோக்குமாருக்கு சந்தேகம் வந்தது. இது தொடர்பாக கணவன் மனைவியிடயே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.


இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு அதிகாலை நேரத்தில் மகள் விஜயதாரணி, மகன் அருள்பிரகாசம் ஆகியோரை தந்தை அசோக் குமார் அரிவாளால் வெட்டிக் கொலை செய்தார். மனைவி தவமணி, இன்னொரு மகள் அருள்பிரகாஷினி ஆகியோருக்கும் வெட்டு விழுந்தது. இவர்கள் அனைவரும் இறந்துவிட்டதாக நினைத்த அசோக்குமார், அவரது தலையில் தனக்கு தானே வெட்டிக்கொண்டார். வீட்டிலிருந்த சற்று தூரத்தில் காயத்துடன் கிடந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டனர். அப்போது வேறு ஒருவர் வெட்டிக்கொன்று விட்டதாக கூறி நாடகமாடும் வகையில் தலையில் அவருக்கு தானே வெட்டி கொண்டது தெரியவந்தது.


இதில் பலத்தகாயத்துடன் மனைவி தவமணி, மகள் அருள்பிரகாஷினி ஆகியோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் ஆபத்து கட்டத்தை தாண்டவில்லை என கூறப்படுகிறது. இதற்கிடையில் தலையில் காயத்துடன் அசோக்குமாரும் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் உடல்நலம் தேறிய நிலையில், கெங்கவல்லி காவல்துறையினர் கடந்த வியாழக்கிழமை அவரை கைது செய்தானர். இதையடுத்து ஆத்தூர் அரசு மருத்துவமனை டாக்டரிடம் அசோக் குமாரை அழைத்து சென்றனர். ஆனால் அவர் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்குமாறு கூறினார். இதையடுத்து மீண்டும் அசோக்குமாரை போலீசார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தொடர்ந்து அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் அசோக்குமாரின் தகாத உறவுக்காதலி என கூறப்படும் பெண்ணை பிடித்து நெய்வேலியில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால் அவரோ, அசோக்குமாருக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என கூறி உள்ளார். தொடர் விசாரணை நடந்து வருகிறது. அதே நேரத்தில் சிகிச்சை பெற்று வரும் தவமணி கண் விழித்து பேசினால்தான் நடந்தது என்ன? என்ற முழு விவரமும் தெரியவரும்.