Salem Suitcase Murder: சூட்கேஸில் இருந்த இளம்பெண் சடலம்... விசாரணையில் அதிர்ச்சி தகவல்

உயிரிழந்த பெண் நீண்ட நாட்களாக பலரால் சித்ரவதை செய்யப்பட்டு உயிரிழந்திருக்கலாம் என காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Continues below advertisement

சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில், வைகுந்தம் பகுதியில் சர்வீஸ் சாலையின் ஓரம் உள்ள சிறிய தரைமட்ட பாலத்தின் கீழ் வீசப்பட்டிருந்த சூட்கேஸில் இருந்து கடும் துர்நாற்றம் வீசியது. இதுகுறித்து அந்த வழியாக சென்றவர்கள் அளித்த தகவலின் பேரில், சேலம் மாவட்ட எஸ்பி கௌதம் கோயல், சங்ககிரி டிஎஸ்பி ராஜா, இன்ஸ்பெக்டர்கள் கார்த்திகேயினி (சங்ககிரி), பேபி (எடப்பாடி), செந்தில் குமார் (மகுடஞ்சாவடி) மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று சூட்கேசை திறந்து பார்த்தனர். அப்போது, அதில் அழுகிய நிலையில் சுமார் 20 முதல் 30 வயது மதிக்கத்தக்க இளம் பெண் சடலம் நிர்வாண நிலையில் இருந்தது. முகத்தில் 3 பிளாஸ்டிக் கவர்கள் கொண்டு மூடப்பட்டு, பெட்ஷீட்டால் உடல் முழுவதும் சுற்றப்பட்டிருந்தது. உடல் அழுகிய நிலையில் இருந்ததால், தலை முடி இல்லை. அந்த பெண்ணின் இரு கைகளிலும் தலா 6 விரல்கள் என 12 விரல்கள் இருந்தது.

Continues below advertisement

இதையடுத்து, தடய அறிவியல் நிபுணர்களை வரவழைத்து, தடயங்கள் சேகரிக்கப்பட்டது. மேலும், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்க விடப்பட்டது. அது அங்கிருந்து சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் சிறிது தூரம் சென்று நின்று விட்டது. போலீசார் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

சடலம் வீசப்பட்டிருந்த இடம், ஆள் நடமாட்டம் அதிகமில்லாத ஒதுக்குப்புறமாக இருப்பதால், வேறு எங்கோ வைத்து இளம்பெண்ணை கொலை செய்த மர்ம நபர்கள், சூட்கேசில் அடைத்து எடுத்து வந்து, இந்த பகுதியில் வீசி விட்டு சென்றிருக்கலாம் என கருதப்படுகிறது. மேலும், அந்த பெண் வட மாநிலத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். அப்பெண்ணின் உடலில் எங்கும் காயங்கள் இல்லை. முகமும் சிதைக்கப்படவில்லை. அவரது முகத்தை பாலிதீன் கவரால் மூடி மூச்சை திணறடித்து கொன்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

கடந்த 4 நாட்களில் சேலம்- கோவை தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்ற வாகனங்கள் குறித்த பட்டியலை சேகரித்து, போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். கொலையாளிகளை பிடிக்க, சங்ககிரி டிஎஸ்பி ராஜா மேற்பார்வையில், மகுடஞ்சாவடி இன்ஸ்பெக்டர் செந்தில் குமார். எஸ்ஐக்கள் ஸ்ரீ ராமன், கண்ணன் ஆகியோர் தலைமையில், 3 தனிப்படை அமைத்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இளம் பெண்ணை கொன்று சூட்கேசில் அடைத்து வீசப்பட்ட சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும், ஆறு விரல்கள் கொண்டு காணாமல் போன பெண்ணின் விவரங்கள் தெரிந்தால் உடனடியாக சங்ககிரி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மர்மப் பெண் குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் கிடைத்துள்ளது. அதில் உயிரிழந்த பெண்ணுக்கு சுமார் 18 வயது இருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. மேலும் அவர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. உயிரிழந்த பெண் நீண்ட நாட்களாக பலரால் சித்ரவதை செய்யப்பட்டு உயிரிழந்திருக்கலாம் என தெரியவந்துள்ளது. மேலும் இளம்பெண் உடலை சுற்றி இருந்த பெட்ஷீட் லாட்ஜ் அல்லது ஹோட்டலில் பயன்படுத்துவது. சூட்கேஸ் பெங்களூரைச் சேர்ந்த நிறுவனத்தில் தயாரிக்கப்பட்டது என விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சூட்கேஸ் புதிதாக வாங்கி இருக்கலாம் என்பதால் இந்த சூட்கேஸ் நிறுவனத்தின் பெங்களூரில் உள்ள ஐந்து கடைகளில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Continues below advertisement
Sponsored Links by Taboola