சேலம் மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் வாகன பிரிவு ஆய்வாளராக பணியாற்றி வருபவர் சதாசிவம். இவர் லஞ்ச ஒழிப்பு துறையில் ஆய்வாளராக பணியாற்றி வரும் ரவிக்குமாரை தொடர்பு கொண்டு லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை செய்ய வருவதற்கு முன்பு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதற்காக மாதம் ஐந்தாயிரம் ரூபாய் லஞ்சம் கொடுப்பதாகவும் தெரிவித்துள்ளார். ஆய்வாளர் ரவிக்குமார் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரியிடம் புகார் அளித்துள்ளார். 



இதன் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளின் ஆலோசனைப்படி, வட்டார போக்குவரத்து வாகன பிரிவு ஆய்வாளர் சதாசிவத்திடம் லஞ்சத்தை பெற்றுக் கொள்வதாக கூறி, சேலம் மாவட்டம் கருப்பூரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் வருமாறு ரவிக்குமார் தெரிவித்துள்ளார். அதன்படி, கருப்பூர் பகுதியில் உள்ள ஹோட்டலுக்கு லஞ்ச பணத்துடன் வந்த வட்டாரப் போக்குவரத்து வாகன பிரிவு ஆய்வாளர் சதாசிவத்தை கையும் காலமாக பிடித்தவர். அவரிடமிருந்து லஞ்சம் வழங்குவதற்காக கொண்டுவரப்பட்ட ரூபாய் ஒரு லட்சம் பணத்தை லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட சிவகுமாரை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சேலம் குமாரசாமிப்பட்டி பகுதியில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிக்கு, லஞ்சம் கொடுக்க முயன்று, போக்குவரத்து வாகன பிரிவு ஆய்வாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


அண்மையில் ஆத்தூர் மற்றும் மேட்டூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் அடுத்தடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது, கணக்கில் வராத பணத்தை பறிமுதல் செய்து அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்த நிலையில், மேற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலக மோட்டார் ஆய்வாளர் தான் பணிபுரியும் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை மேற்கொள்ள வந்தால் முன்கூட்டியே தகவல் சொல்லுமாறு லஞ்ச ஒழிப்பு துறை ஆய்வாளருக்கே லஞ்சம் கொடுத்தபோது கைது செய்யப்பட்ட சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.