சேலம் ஆத்தூரில் மாவட்ட கிளை சிறை செயல்பட்டு வருகிறது. இங்கு 150-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் இரவு கஞ்சா வழக்கு கைதி யோகேஸ்வரன் என்பவரை 5 கைதிகள் ஒன்று சேர்ந்து தாக்கியதாக சேலம் மத்திய சிறை கண்காணிப்பாளர் வினோத்திற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று சிறைக்கு சென்று விசாரணை நடத்தினர். இதில் புதிய தகவல்கள் வெளியானது. நேற்று முன்தினம் திங்கட்கிழமை இரவு சிறையில் கைதிகள் கேரம்போர்டு விளையாடினர். இதில் கார்த்தி, சூர்யா, சதீஷ்,ரவிச்சந்திரன், ஆஷிக் மற்றும் யோகேஸ்வரன் ஆகியோர் பங்கேற்றனர். இதில் தோற்பவர்கள் 50 டம்ளர் தண்ணீரை ஒரே நேரத்தில் குடிக்க வேண்டும் என்பதுதான் போட்டியின் பந்தயமாம்.
அதன்படி, நடந்த விளையாட்டில் லோகேஸ்வரன் தோல்வியடைந்த பந்தயம் கட்டியதுபோல 50 டம்ளர் தண்ணீரை குடிக்குமாறு யோகேஸ்வரனிடம் மற்ற நான்கு பேரும் கூறினர். ஆனால் அவர் குடிக்க மறுத்துவிட்டார்.இதனால் கோபமடைந்த நான்கு பேரும் சேர்ந்து சத்தம் வெளியே வராமல் வாயை மூடி சரமாரியாக குத்து விட்டுள்ளனர். இதில் அவருக்கு நேற்று, மார்பு,தலை ஆகிய இடங்களில் காயம் ஏற்பட்டது. அடித்ததை வெளியே சொல்லக்கூடாது என கூறியும் மிரட்டி உள்ளனர். நேரமாக யோகேஸ்வரனுக்கு வலி ஏற்பட்டது. இதையடுத்து நேற்று பகல் அதிகாரிகளிடம் சம்பவம் பற்றி கூறினார். இந்த நிலையில் கைதிகள் கார்த்தி, சூர்யா, சதீஷ், ரவிச்சந்திரன், ஆஷிக் ஆகியோரை சேலம் மத்திய சிறைக்கு மாற்ற உத்தரவிட்ட சிறை கண்காணிப்பாளர் வினோத், ஐந்து கைதிகளுக்கும் அனைத்து விதமான சலுகைகளும் மூன்று மாதம் தடை விதித்தார். இந்த சம்பவம் சிறை வட்டாரத்தில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
மேலும் ஆத்தூர் கிளை சிறையில் பணியாற்றி வரும் முதல் தலைமை காவலர் செந்தில்குமார், இரண்டாம் நிலை காவலர் ராஜவர்மன் ஆகிய இருவரும் பணியில் கவனக்குறைவாக செயல்பட்டதால் இரண்டு பேரையும் பணியிடை நீக்கம் செய்து சேலம் மத்திய சிறை கண்காணிப்பாளர் வினோத் உத்தரவிட்டார். மேலும் ஐந்து கைதிகள் மீதும் ஆத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.