சேலத்தில் ரியல் எஸ்டேட் அதிபரை கடத்தி பணம் பறித்த ரவுடிகள், தப்பியோட முயன்றபோது தவறிக் கீழே விழுந்ததில் கால் முறிந்ததால் இருவரும் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சேலம் மாவட்டம் வெள்ளாளப்பட்டி பகுதியை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் அன்பழகன் என்பவரை கடந்த சில நாட்களுக்கு முன்பு கத்தி முனையில் கடத்திச் சென்ற கும்பல் ஒன்று, கன்னங்குறிச்சி பகுதியில் உள்ள ஏற்காடு மலை அடிவாரத்தில் அவரை கட்டி வைத்து அடித்து துன்புறுத்தி பணம் கேட்டு மிரட்டி உள்ளனர். ஒரு லட்சம் ரூபாய் கொண்டு வந்து தங்களிடம் கொடுத்து விட்டு அன்பழகனை மீட்டுச் செல்லுமாறு அவரின் சகோதரிக்கு அந்த கும்பல் போன் மூலம் தகவல் தெரிவித்தது. இதையடுத்து கன்னங்குறிச்சி மலை அடிவாரத்திற்கு சென்ற அன்பழகனின் சகோதரி 4 பவுன் தங்க நகை மற்றும் 5 ஆயிரம் ரூபாய் ரொக்கத் தொகையை, ரவுடி கும்பலிடம் கொடுத்து அன்பழகனை அவரின் சகோதரி மீட்டுச் சென்றார்.
இதுதொடர்பாக கருப்பூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் அன்பழகனை கடத்திச் சென்ற நபர்கள் 20 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டியதும் அவரின் வீட்டில் இருந்த 30 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்றதும் விசாரணையில் தெரியவந்தது. சில ஆண்டுகளுக்கு முன்பாக அன்பழகன் பெரியளவில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்ததால் அவரிடம் கோடி கோடியாக பணம் இருக்கும் என நினைத்து ரவுடி கும்பல் கடத்தி சென்றதும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இதை தொடர்ந்து விசாரணை நடத்திய போலீசார் ஆள் கடத்தல் கும்பலை கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டனர்.
அதில் அஸ்தம்பட்டி பகுதியை சேர்ந்த பிரபல ரவுடியான சித்தேஸ்வரன் மற்றும் அவரின் கூட்டாளிகள் அன்பழகனை கடத்திச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து ரவுடி சித்தேஸ்வரனை போலீசார் அதிரடியாக கைது செய்து, கடத்தலுக்கு பயன்படுத்திய நான்கு சக்கர வாகனத்தை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். அவருடன் கடத்தல் கும்பலைச் சேர்ந்த கூட்டாளிகள் 5 சிக்கியுள்ளார். இவர்களிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர். இந்த நிலையில் ரவுடிகள் சித்தேஸ்வரன், அரவிந்த் ஆகிய இருவரும் தப்பி ஓட முயன்ற போது கீழே விழுந்து கால் எலும்பு முறிவு ஏற்பட்ட நிலையில் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார். இதை தொடர்ந்து உதவி காவல் ஆணையர் நாகராஜ் தலைமையில் கருப்பூர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.