சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டியில் உள்ள வேலு நகர் தெருவில் ராஜ சேகரன் (42) மற்றும் அவரது மனைவி கார்த்திகை தேவி (35) வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஐந்தாம் வகுப்பு படிக்கும் ஒரு மகள் உள்ளார். ராஜ சேகரன் சீலநாயக்கன்பட்டி பகுதியில் தனியார் நிறுவனத்தில் பாதுகாவலராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் கடந்த 11 ஆம் தேதி இரவு அனைவரும் வீட்டில் உறங்கிக் கொண்டுள்ளனர். அப்போது நள்ளிரவில் மனைவி கார்த்திகை செல்வியை கொலை செய்துவிட்டு கணவர் ராஜ சேகரன் வீட்டில் இருந்து தப்பியோடி உள்ளார். அதிகாலை மகள் எழுந்து பார்த்தபோது தாய் உயிரிழந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து கதறி அழுதுள்ளார். வீட்டின் அருகில் இருந்த உறவினர்கள் சிறுமி அழும் சத்தம்கேட்டு வந்து வீட்டில் பார்த்தபோது கார்த்திகை செல்வி சடலமாக கிடந்துள்ளார். உடனே இதுதொடர்பாக அன்னதானப்பட்டி காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 



உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் கார்த்திகை செல்வியின் உடலை மீட்டு சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு உடற் கூறு ஆய்விற்கு அனுப்பி வைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள கணவர் ராஜ சேகரனை பிடித்தால் தான் உண்மை தெரியவரும் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் அருகில் உள்ள உறவினர்களிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மனைவியை கொன்று கணவர் தப்பி ஓடிய சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தலைமறைவாக இருந்த ராஜசேகரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்தனர்.


இந்த நிலையில், ராஜசேகர் சென்னையில் இருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில், சென்னையில் தலைமறைவாக இருந்த ராஜசேகரை கைது செய்து சேலம் அழைத்து வந்தனர். பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில், சம்பளம் குறைவாக இருந்த நிலையில் மனைவி கேட்ட பணத்தைக் கொடுக்க முடியவில்லை. இதனால் மனைவி ஆபாச வார்த்தைகளால் திட்டி தகராறில் ஈடுபட்டதாகவும், அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் ஆத்திரமடைந்து கொலை செய்ததாகவும் ராஜசேகர் வாக்குமூலம் அளித்துள்ளார்.