சேலம் மாவட்டம் ஆத்தூர் அடுத்துள்ள ராணிப்பேட்டை பகுதியில் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப் பொறியாளர் மற்றும் உதவி பொறியாளர் அலுவலகம் உள்ளது. இங்கு உதவி கோட்ட பொறியாளராக சேலம் அயோத்தியாபட்டினம் இப்பகுதியைச் சேர்ந்த சந்திரசேகர் என்பவர் பணியாற்றி வருகிறார். இந்த அலுவலகத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு இறுதியில் தம்மம்பட்டி டூ தெடாவூர் சாலை விரிவாக்க பணிக்காக ரூ.7 கோடி மதிப்பீட்டு டெண்டர் விடப்பட்டது. இதனை சுந்தர்ராஜன் என்பவர் ஒப்பந்தம் எடுத்துள்ளார். இந்த நிலையில் ஒப்பந்தம் ஒதுக்கீடு செய்ய ஒப்பந்த தொகையிலிருந்து சுமார் 12 சதவீதம் லஞ்சமாக கொடுக்க வேண்டும் என கேட்டுள்ளனர்.
முதற்கட்டமாக சேலம் கோட்ட பொறியாளருக்கு 0.5 சதவீதம் கமிஷன் வழங்க வேண்டும் என்று கூறி, அதற்காக ரூ.3.53 லட்சத்தை கொண்டுவந்து கொடுக்குமாறு சந்திரசேகர் கூறியுள்ளார். ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத ஒப்பந்ததாரர் சுந்தர்ராஜன் இதுகுறித்த லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரிடம் புகார் தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி கிருஷ்ணராஜ் தலைமையில் நேற்று பணத்தை எடுத்துக்கொண்டு ஆத்தூரில் உள்ள உதவி கோட்ட பொறியாளர் அலுவலகத்திற்கு சுந்தரராஜன் சென்றார். அங்கு அலுவலகத்தில் இருந்த சந்திரசேகரிடம் பணத்தை கொடுத்துள்ளார். அதனை சந்திரசேகர் வாங்கியபோது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு காவலர்கள் உதவி பொறியாளர் சந்திரசேகர் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். அவரிடமிருந்து கணக்கில் வராத ரூ.3.53 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி கிருஷ்ணராஜ் தலைமையிலான குழுவினர் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைப்பற்றப்பட்ட பணத்தை உயரதிகாரியாக சேலம் கண்காணிப்பு பொறியாளர் சுரேஷ் என்பவருக்கும் கொடுப்பதற்காகவே கொண்டுவர சொன்னதாக சந்திரசேகரன் கூறியுள்ளார். இதனைத்தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சேலம் இரும்பாலை சாலையில் உள்ள கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தில் சோதனை நடத்தச் சென்றனர்.
அப்போது லஞ்ச ஒழிப்பு காவல்துறை வருவதை அறிந்த உடன் அலுவலகத்தில் இருந்த கணக்கில் வராத பணம் ரூ.81 ஆயிரத்தை ஜன்னல் வழியாக வெளியே வீசியுள்ளனர். ஆனால் லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரணையில் அலுவலகத்திலிருந்து கணக்கில் வராத ரூ.81 ஆயிரத்தை ஜன்னல் வழியாக வீசியது தெரியவந்தது. இதையடுத்து அந்தப் பணத்தை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கைப்பற்றினார். மேலும் அங்கிருந்த முக்கிய ஆவணங்களை ஆய்வு செய்தனர். தொடர்ந்து சேலம் குரங்குச்சாவடி பகுதியில் உள்ள நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் சுரேஷ் இல்லத்திலும் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனை நடத்தினர். அங்கிருந்தும் கணக்கில் வராத பணம், முக்கிய ஆவணங்கள், லேப்டாப், பென் டிரைவ் மற்றும் சொத்து ஆவணங்கள் போன்றவற்றை கைப்பற்றியதாக தகவல் கிடைத்துள்ளது.