சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள சார்பாய் பகுதியில் வசித்து வருபவர் குழந்தை வேலு. தொழிலதிபாரான இவருக்கு சேகோ ஆலை, ரைஸ் மில் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சாலைகள் உள்ளது. இவருக்கு சந்தோஷ் என்கிற சக்திவேல் என்ற ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளார். பிள்ளைகள் இருவருக்கும் திருமணமான நிலையில் சந்தோஷ் தந்தையின் ஆத்தூர் பகுதியில் உள்ள சேகோ தொழிற்சாலை கவனித்து வருவதாக கூறப்படுகிறது. கடந்த ஐந்து வருட காலமாக ஆத்தூரில் உள்ள சேகோ தொழிற்சாலையை சந்தோஷ் தான் கவனித்து வந்துள்ளார்.
இதற்கிடையில் சந்தோஷுக்கு தொழில் ரீதியான கடன் பிரச்னை நிலவி உள்ளது. இதனால் அதிக கடன் வெளியில் வாங்கியுள்ளார். இது தந்தை குழந்தை வேலுவிற்க்கு தெரிந்த நிலையில் தந்தை மற்றும் மகனுடைய அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. அதிக கடன் ஏற்பட்ட நிலையில் தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு சம்பளம் கூட போட முடியாத நிலை ஏற்பட்டு வந்துள்ளது. ஒரு கட்டத்தில் சந்தோஷ் சேகோ ஆலையை விட்டுவிட்டு ரைஸ் மில்லினை தன்வசம் கொண்டுவர முயற்சி செய்துள்ளார். ஆனால் அதில் குழந்தை வேலுவுக்கு 50 சதவிகித ஷேரும், குழந்தை வேலுவின் மாமனார் சுந்தரம் என்பவருடைய ஷேரும் இருந்து வந்துள்ளது. வங்கி கணக்குகள் முழுவதும் குழந்தை வேலுவின் பெயரில் இருப்பதால், சந்தோஷ் அதிருப்தியில் இருந்து வந்ததாக தெரிகிறது.
இதனால் ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த சந்தோஷ் கடந்த பிப்ரவரி மாதம் 16 தேதி பெரம்பலூர் மாவட்டம் கிருஷ்ணாபுரத்தில் உள்ள தனது வீட்டில் உள்ள திண்ணையில் குழந்தை வேலு அமர்ந்திருந்த போது, சந்தோஷ் குழந்தை வேலுவை கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்டுள்ளார். அதன் பின்னர் குழந்தை வேலுவின் மனைவி ஹேமா மற்றும் வேலையாட்கள் சந்தோஷை வந்து பிடித்துள்ளனர். ஆனால் அவர் கடைசி வரையிலும் மீண்டும் மீண்டும் வந்து குழந்தைவேலுவை கொலைவெறி நோக்கத்துடன் தாக்கியுள்ளார். பின்னர் பலத்த காயமடைந்த குழந்தைவேலு திருச்சி அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். உடலில் காயங்கள் அதிகமாக இருந்ததால் மருத்துவமனையில் இருந்து கைகளத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. பின்னர் சிகிச்சை முடிந்து வந்த குழந்தைவேலு தனக்கும், தன் மகனுக்கும் உள்ள பிரச்னையை தாங்களே பேசி முடித்துக் கொள்வதாக எழுதிக் கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சிகிச்சை முடிந்து வந்த இரண்டு நாட்களில் குழந்தைவேலு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பின் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. இந்நிலையில் குழந்தை வேலுவை கடந்த பிப்ரவரி மாதம் 16 ஆம் தேதி சந்தோஷ் தாக்கியது, அவர்களது வீட்டில் உள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ளது. தற்போது அந்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அதன் மூலம் கைகளத்தூர் காவல்துறையினர் சந்தோஷை கைது செய்து மூன்று பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.