சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே பெண்கள் விடுதியில் லோகநாயகி என்ற இளம்பெண் தங்கி அருகில் இருக்கும் நீட் கோச்சிங் சென்டரில் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் கடந்த நான்கு நாட்களாக லோகநாயகி பெண்கள் விடுதிக்கு வரவில்லை என்று கூறி, பெண்கள் விடுதியின் வார்டன் சேலம் பள்ளப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் காணவில்லை என்று வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்டமாக லோகநாயகியின் செல்போன் எண்ணை பரிசோதனை செய்து பார்த்தபோது கடைசியாக ஏற்காடு மலைப்பகுதியில் செல்போன் சுவிட்ச் ஆஃப் ஆகியுள்ளது. பின்னர் லோகநாயகி யாருடன் செல்போனில் பேசி உள்ளார் என்பது குறித்து சோதனை செய்து பார்த்தபோது அப்துல் ஹபீஸ் என்ற வாலிபருடன் அதிக நேரம் செல்போனில் பேசி உள்ளார். மேலும் இறுதியாக இவரிடம் பேசி இருப்பதும் தெரியவந்துள்ளது. அப்துல் ஹபீஸ், லோகநாயகியின் காதலர் என விசாரணையில் தெரிய வந்தது. பின்னர் அவரைப் பிடித்து வந்து விசாரணை செய்தபோது திடுக்கிடும் தகவல்களை வாக்குமூலமாக அளித்துள்ளார்.
அதில், அப்துல் ஹபீஸ், லோகநாயகி மட்டுமில்லாமல் மோனிகா மற்றும் தாவியா சுல்தானா ஆகிய மூன்று பெண்களையும் காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் லோகநாயகி, அப்துல் ஹபீஸை விட வயது அதிகமானவர். இந்த நிலையில் லோகநாயகி அப்துல் ஹபீஸை திருமணம் செய்து கொள்ளும்படி தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளார். லோகநாயகி தொடர்ந்து தொந்தரவு செய்து வரும் நிலையில் அவரை கொலை செய்ய திட்டம் தீட்டி உள்ளார். இதற்காக அவரது மற்ற இரண்டு காதலிகள் உதவியை நாடி உள்ளார். விஷ ஊசி செலுத்தி கொலை செய்து விடலாம் என்ற திட்டம் தீட்டி நர்சிங் மாணவியான மோனிகா உதவியுடன் சேலம் ஏற்காடு மலைப்பகுதிக்கு அழைத்து சென்று விஷ ஊசியை செலுத்தி லோகநாயகியை கொலை செய்துள்ளனர். இதையடுத்து லோகநாயகி உடலை சேலம் ஏற்காடு மலைப்பகுதியில் வீசிவிட்டு மூன்று பேரும் அங்கிருந்து புறப்பட்டு வழக்கம்போல் தங்களது பணிகளை மேற்கொண்டு வந்துள்ளனர்.
இந்த நிலையில் வாலிபர் கூறிய வாக்குமூலத்தின் அடிப்படையில் அப்துல் ஹபீஸ்சின் மற்ற இரண்டு காதலிகளையும் கைது செய்து சேலம் ஏற்காடு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அப்துல் ஹபீஸ் பொறியியல் கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் நான்காம் ஆண்டு மாணவன், காவியா சுல்தானா தனியார் வங்கியில் ஊழியர், மற்றொரு காதலை மோனிகா நர்சிங் கல்லூரி மாணவி என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. பின்னர் உடல் ஏற்காடு மலைப்பகுதியில் மீட்கப்பட்டதால் சேலம் ஏற்காடு காவல்நிலையத்திற்கு வழக்கு மாற்றப்பட்டது. பின்னர் கொலை செய்யப்பட்ட லோகநாயகியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதையடுத்து அப்துல் ஹபீஸ், தாவியா சுல்தானா, மோனிகா ஆகிய மூவர் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பும் பணியை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். இளம் பெண்ணை காதலிகளுடன் கொலை செய்த காதலன் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.