சேலம் மாவட்டம் வெள்ளாளகுண்டம் பகுதியை சேர்ந்த விக்னேஷ் கண்ணன். இவர் கடந்த மூன்று ஆண்டாக பனமரத்துப்பட்டி பகுதி சேர்ந்த ஸ்ரீநிதி என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியேறி விக்னேஷ் கண்ணன், ஸ்ரீநிதி ஆகிய இருவரும் குறிஞ்சி ஈஸ்வரன் கோவிலில் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இந்த நிலையில் விக்னேஷ் கண்ணன் பெற்றோரை, பெண்ணின் உறவினர்கள் மூலமாக கடத்தி வைத்துக் கொண்டு பெண்ணை விடாவிட்டால் எனது பெற்றோரை கொலை செய்து விடுவேன் என்று மிரட்டுவதாக காதல் திருமணம் செய்து கொண்ட ஜோடி வீடியோ வெளியிட்டுள்ளனர்.


Crime: காதல் திருமணம் செய்துகொண்டு கதறும் காதல் ஜோடி... பெற்றோரை கடத்தி கொலை மிரட்டல்


எனது காதல் மனைவி ஸ்ரீ நிதியை அவர்களிடம் ஒப்படைத்தால் என் மனைவியை கொலை செய்து விடுவார்கள். விடாவிட்டால் எனது பெற்றோரை கொலை செய்துவிடுவார்கள். இது தொடர்பாக வாழப்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்த போது அவர்கள் கொண்டலாம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கும்படி கூறினர். கொண்டலாம்பட்டி காவல் நிலையத்திற்கு சென்றால் மல்லூர் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். காவல் நிலையத்தில் புகார் செய்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. என்ன செய்வது என்று தெரியாமல் காதல் ஜோடி வீடியோ மூலம் தங்களது மனக்குமுறலை வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனிடையே தனது பெற்றோரை கடத்துவதற்கு முன்பாக கடத்தும் நபர் எங்களது பெண்ணை விடாவிட்டால் உங்களது பெற்றோரை தூக்கி விடுவோம் என்று மிரட்டல் விட்டு ஆடியோ சம்பந்தப்பட்ட விக்னேஷ் கண்ணனுக்கு அனுப்பி உள்ளார். காதல் திருமணம் செய்து கொண்ட ஜோடியை பிரிப்பதற்காக காதலனின் பெற்றோரை கடத்தியதாக காதல் ஜோடி வீடியோ வெளியிட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.