தமிழகத்தில் கொரோனா 3 ஆம் அலை தீவிரமடைந்து வரும் நிலையில் கொரோனா பரிசோதனையும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் விருப்பப்படி அரசு மருத்துவமனையிலோ அல்லது வீட்டு தனிமையிலோ சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.


 



இந்தநிலையில், சேலத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நபர்களை தனியார் மருத்துவமனைகள் குறிவைத்து வருவது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சேலம் மாவட்டம் பச்சப்பட்டி, மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கிருஷ்ணசாமி என்பவரின் மனைவி காந்திமதி (70) கடந்த 24 ஆம் தேதி அம்மாபேட்டையில் உள்ள அண்ணா மருத்துவமனையில் (அரசு மருத்துவமனை) கொரோனா பரிசோதனை மேற்கொண்டுள்ளார்.


அவருக்கு 25 ஆம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், அவரது குடும்பத்தை சேர்ந்த அவரது மகன், மருமகள், பேரன்கள் ஆகியோருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் காந்திமதியின் மகன் சுரேஷ் பாபுவுக்கும், பேரன் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி ஆகியுள்ளது. 3 பேரும் அரசு மருத்துவமனையில் மருந்துகள் பெற்றுக்கொண்டு வீட்டில் ​தனிமையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


இந்த நிலையில் 27 ஆம் தேதி சுரேஷ் பாபுவை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட தனியார் மருத்துவமனை பெண் ஊழியர் ஒருவர், உங்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை உங்களுக்கு தெரிவித்துள்ளனரா என்று கேட்டதுடன், உங்களுக்கு வீடு தேடி வந்து உதவி செய்வோம் என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்துள்ளார்.



அதனை தொடர்ந்து சிறிதுநேரம் கழித்து அந்த செல்போன் எண்ணுக்கு சுரேஷ்பாபு அழைத்தபோது, அது பிரியம் மருத்துவமனை என்று தெரியவந்துள்ளது. மேலும் தன்னுடைய செல்போன் எண் எப்படி உங்களுக்கு கிடைத்தது என்று கேட்டபோது ஆன்லைனில் இருந்து எடுத்ததாக கூறியுள்ளனர். என்னுடைய அனுமதி இல்லாமல் எப்படி என்னுடைய செல்போன் எண்ணை எடுத்தீர்கள் என்று கேள்வி எழுப்பவே, இனிமேல் இதுபோல் உங்களை அழைக்க மாட்டோம் என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்து கொண்டனர்.


2 தவணை தடுப்பூசி செலுத்தி கொண்ட பலரும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வீட்டு தனிமையிலேயே உள்ளதால் தனியார் மருத்துவமனைகளுக்கு கொரோனா நோயாளிகள் வருகை குறைந்து விட்டன. அதனால், கொரோனா நோயாளிகளை தேடிச்சென்று அவர்களை தங்களது மருத்துவமனைக்கு இழுக்கும் வேலையை சில தனியார் மருத்துவமனைகள் செய்து வருகின்றனர். அதில் ஒன்றுதான் சுரேஷ்பாபுவுக்கு வந்த செல்போன் அழைப்பு. அதுமட்டுமல்லாமல் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் பட்டியலை தனியார் மருத்துவமனைக்கு விற்பனை செய்து சுகாதாரத்துறை ஆதாயம் தேடுகின்றதா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது. 


இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி, தனியார் மருத்துவமனைகளுக்கு உறுதுணையாக செயல்படும் சுகாதாரத்துறை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சேலம் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். இதனிடையே இந்த ஆடியோ பல்வேறு வாட்ஸ்அப், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வந்ததால் இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு சேலம் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் கார்மேகம் உத்தரவிட்டுள்ளார்.