சேலத்தில் நான்காவது கணவருடன் சேர்ந்து தனது ஒரு வயது குழந்தையை அடித்துக் கொன்ற பெண்ணை, போலீசார் கைது செய்துள்ளனர். கர்நாடகாவில் தலைமறைவாக இருந்த நிலையில் குற்றவாளிகள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
படுகாயங்களுடன் அனுமதிக்கப்பட்ட குழந்தை:
சேலம் அரசு மருத்துவமனையில் தலையில் படுகாயங்களுடன் ஒரு வயது பெண் குழந்தை சில தினங்களுக்கு முன்பாக அனுமதிக்கப்பட்டது. அங்கு சிகிச்சை பலனின்றி அந்த குழந்தை உயிரிழந்துள்ளது. இதுதொடர்பாக மருத்துவர்கள் தாரமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனிடையே, அந்த குழந்தையை மருத்துவமனையில் அனுமதித்த தம்பதி தலைமறைவாகியுள்ளனர்.
கர்நாடகாவில் கைது:
சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணையை மேற்கொண்ட போலீசார், கர்நாடகாவில் தலைமறைவாக இருந்த மறைந்த குழந்தையின் தாய் கலைவாணி மற்றும் அவருடன் இருந்த மல்லேஷ் ஆகியோரை கைது செய்தனர். விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
யார் இந்த கலைவாணி?
கைது செய்யப்பவர்கள் அளித்த வாக்குமூலத்தின் படி, சேலம் சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே புதூர்காடம்பட்டியில் தங்கி, செங்கல் சூளையில் வேலை செய்து வந்தவர் தான் மல்லேஷ். அதே சூளையில் சத்தியமங்கலம்புதுவடவள்ளியை சேர்ந்த சக்திவேல் என்பவர் வேலை செய்து வந்தார். அவரது மனைவி தான் 27 வயதான கலைவாணி. இந்த தம்பதிக்கு ஒரு வயதில் பெண் குழந்தை இருந்தது.
திருமணத்தை மீறிய உறவு:
இந்த சூழலில் தான் கலைவாணியுடன் மல்லேஷூக்கு பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் அது திருமணத்தை மீறிய உறவாக மாறியுள்ளது. இருவரும் தனிமையில் சந்தித்து அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளனர். ஒருகட்டத்தில் இனி கணவரை விட்டு பிரிந்து மல்லேசுடன் வாழ்வது என முடிவெடுத்துவிட்டு, தனது ஒரு வயது கைக்குழந்தை உடன் கலைவாணி மல்லேஷூடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். தொடர்ந்து இருவரும் ஓமலூர் அருகே புதூர் காடம்பட்டியில் தங்களது வாழ்க்கையை தொடங்கியுள்ளனர். அங்கிருந்த ஒரு செங்கல் சூளையில், தங்களை தம்பதி என்று சொல்லி வேலைக்கும் சேர்ந்துள்ளனர்.
சுவற்றில் அடிக்கப்பட்ட குழந்தை:
புதுவாழ்க்கை நன்றாக சென்று கொண்டிருந்த நிலையில், கலைவாணியின் குழந்தையின் மீது மல்லேஷூக்கு நாளடைவில் வெறுப்பு வந்தது. யாரோ பெற்ற குழந்தையை, தன்னால் பராமரிக்க முடியாது என்று கூறி வந்துள்ளார். இந்நிலையில், சம்பவத்தன்று இரவு கலைவாணி மற்றும் மல்லேஷ் ஆகிய இருவரும் சேர்ந்து மது அருந்திவிட்டு உல்லாசமாக இருந்துள்ளனர். அப்போது குழந்தை திடீரென அழுதுள்ளது. இதனால், ஆத்திரமடைந்த அவர்கள், ஒரு வயதே ஆன அந்த பெண் குழந்தையை ஈவிரக்கமில்லாமல் சுவற்றில் தூக்கி அடித்துள்ளனர்.
மறுநாள் மருத்துவமனையில் அனுமதி:
இதில், குழந்தை படுகாயமடைந்து ரத்தம் கொட்டினாலும், அதை சற்றும் பொருட்படுத்தாமல் சாவகாசமாக மறுநாள்தான், குழந்தையை ஓமலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு குழந்தையின் உடல்நிலை கவலைக்கிடமானதை தொடர்ந்து தான், சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்துள்ளது. இதையறிந்து தலைமறைவான தம்பதியை தான் கர்நாடகாவில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர். அதோடு, கலைவாணி ஏற்கனவே 3 பேரை திருமணம் செய்து பிரிந்துவிட்டதும், அதைதொடர்ந்து நான்காவது நபராக தான் மல்லேஷை திருமணம் செய்து கொண்டதும் தெரிய வந்துள்ளது.