சேலத்தில் பருப்பு ஆலையில் இரவு காவலாளி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்தின் போலீஸ் விசாரணையில் பல திடுக்கிடும் சம்பவங்கள் வெளியாகியுள்ளது.
சேலம் மாவட்டம் அமானி கொண்டலாம்பட்டியில் தங்கையன் என்பவர் மனைவி லட்சுமியுடன் வசித்து வருகிறார். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ள நிலையில், 58 வயதான தங்கையன் லீ பஜார் பகுதியில் உள்ள பருப்பு ஆலை ஒன்றில் இரவு நேர காவலாளியாக பணியாற்றி வந்துள்ளார். இதனிடையே கடந்த பிப்ரவரி 8 ஆம் தேதி தங்கையன் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். அதேசமயம் ஆலையில் இருந்த பணமும் கொள்ளை போயிருந்தது. பிரேத பரிசோதனை அறிக்கையில் தங்கையன் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பள்ளப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் காவல் ஆணையர் நஜ்மல் ஹோடா உத்தரவின் பேரில் துணை ஆணையர்கள் எஸ்.பி. லாவண்யா, மாடசாமி ஆகியோர் மேற்பார்வையில் உதவி ஆணையர் நாகராஜன், ஆய்வாளர் ராணி அடங்கிய தனிப்படையினர் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதில் நள்ளிரவு இளைஞர் ஒருவர் சைக்கிளில் வந்து செல்லும் காட்சி இருந்துள்ளது. அவர் யார் என தீவிர விசாரணை நடத்திய நிலையில், தங்கையன் உயிரிழந்த சம்பவத்தில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த அமர்ஜித்குமார் என்ற சோனுகுமார் என்ற 19 வயது நபருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இவர் கடந்த பிப்ரவரி 8 ஆம் தேதி தான் பருப்பு ஆலையில் வேலைக்கு சேர்ந்துள்ளார் என்பது தெரிய வந்தது.
உடனடியாக அவரது செல்போன் நம்பரை வாங்கிய காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அவர் தலைமறைவான நிலையில், செல்போன் சிக்னலை வைத்து ஆய்வு செய்ததில் அது சேலம் சூரமங்கலம் ரயில் நிலையத்தை காட்டியுள்ளது. விரைந்து ரயில் நிலையம் சென்ற போலீசார் அமர்ஜித்குமாரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்றனர். அங்கு அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
அதாவது பிப்ரவரி 8 ஆம் தேதி வேலை கேட்டு பீகாரைச் சேர்ந்த அமர்ஜித் குமார் மற்றும் ஒரு இளைஞர் வந்துள்ளனர். உள்ளூர் ஆட்கள் மூட்டைகளை ஏற்றி இறக்க வழக்கமாக ரூ.800 கூலி கேட்ட நிலையில், இவர்கள் ரூ.500 கொடுத்தால் போதும் என சொல்லியுள்ளனர். ரூ.300 மிச்சம் ஆகிறதே என எண்ணி பருப்பு ஆலை உரிமையாளர் அவர்கள் இருவரில் அமர்ஜித் சிங்கை மட்டும் வேலைக்கு அமர்த்தியுள்ளார்.
வேலைக்கு வந்த இடத்தில் அளவுக்கதிகமாக பணம் புழங்குவதைப் பார்த்த அமர்ஜித்குமார் அதனை கொள்ளையடிக்க திட்டமிட்டார். மறுநாள் இரவு ஆலையின் சுவர் ஏறி உள்ளே நுழைந்து பணத்தை எடுப்பதை தங்கையன் பார்த்து தடுத்துள்ளார். மேலும் உரிமையாளர் மாரிக்கு தகவல் சொல்ல முயன்றதால் அதிர்ச்சியடைந்த அமர்ஜித் அங்கிருந்த சாக்குப்பையால் தங்கையன் முகத்தை மூடி கொலை செய்துள்ளார். பின்னர் அங்கிருந்து பணத்துடன் தப்பிச் சென்றதும் விசாரணையில் தெரிய வந்தது. கூலி குறைவாக கொடுக்கிறோமே என நினைத்து வேலைக்கு அமர்த்தும் முன்பின் தெரியாத நபர்களால் என்ன மாதிரியான விபரீதம் நிகழும் என்பதற்கு இந்த சம்பவம் சாட்சி..!