கடந்த சில மாதங்களுக்கு முன்பு காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி வசந்த் என்பவர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இவரை மற்றொரு வழக்கில் கைது செய்ய காஞ்சிபுரம் தனிப்படை காவல்துறையினர் வசந்த், ஜாமினில் வெளியே வந்தவுடன் கைது செய்வதற்காக சேலம் மத்திய சிறையின் முன்பாக காத்திருந்தனர். அப்போது சிறை காவலர்கள் சிலர் தனிப்படை காவல்துறையினர் சிறை வளாகத்தில் இருந்து வெளியே அனுப்பிவிட்டனர். நீண்ட நேரம் காத்திருந்த தனிப்படை காவல்துறையினர் மீண்டும் சிறைக்கு சென்று விசாரித்த போது கைதி வசந்த் வெளியே சென்று விட்டதாக தெரிவித்தனர்.
தனிப்படை காவல்துறையினர் வெளியே தான் காத்திருந்தோம் ஆனால் வரவில்லை என்று கூறி, தொடர்ந்து சிறை காவலர்களிடம் விசாரித்தனர். அப்போது கம்பவுண்ட் சுவரை ஒட்டியுள்ள சிறை கேண்டினின் ஷட்டரை திறந்து அவ்வழியாக ரவுடி வசந்த் தப்பியிருப்பது காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் சிறை அதிகாரிகள் விசாரித்தனர். இதில் தலைமை வார்டன் ரமேஷ் குமார், வார்டன் பூபதி ஆகியோருக்கு தொடர்பு உள்ள இருப்பதாக தெரிந்தது.
இதையடுத்து இருவரும் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு கோவை சிறைத்துறை கூடுதல் கண்காணிப்பாளர் சதீஷ் குமார் நியமிக்கப்பட்டார். விசாரணையில் தலைமை வார்டன் ரமேஷ் குமாருக்கு இந்த விவகாரத்தில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதற்கான அறிக்கையை சதீஷ் குமார் சேலம் சிறை கண்காணிப்பாளர் தமிழ் செல்வனிடம் அளித்தார். அதன் அடிப்படையில் தலைமை வார்டன் ரமேஷ் குமார் பணியிலிருந்து பணி நீக்கம் செய்து உத்தரவிட்டார். அவருக்கு பணி நீக்கம் செய்யப்பட்டதற்கான நகல் வழங்கப்பட்டது. இதனால் சேலம் மத்திய சிறை அதிகாரிகள் இடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.