தூத்துக்குடி அருகே உள்ள கூட்டாம்புளி திருமலையாபுரத்தை சேர்ந்தவர் வெற்றிவேல். இவருடைய மகன் துரைமுருகன்(வயது 42). பிரபல ரவுடி. கடந்த வாரம் தென்காசி மாவட்டம் பாவூர் சத்திரம் சிவகாமிபுரத்தை சேர்ந்த ஜெகதீஷ் என்பவர் கொலை செய்யப்பட்டு நெல்லை அருகே காட்டுப்பகுதியில் புதைக்கப்பட்டு இருந்தார். இந்த வழக்கில் துரைமுருகன் சம்பந்தப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதனால் போலீசார் துரைமுருகனை தீவிரமாக தேடி வந்தனர். துரைமுருகனின் செல்போன் பயன்பாட்டை போலீசார் உன்னிப்பாக கவனித்து வந்தனர். நேற்று மதியம் துரைமுருகனின் செல்போன் தூத்துக்குடி அருகே உள்ள முள்ளக்காட்டில் இருந்து கோவளம் கடற்கரைக்கு செல்லும் பகுதியில் இருப்பதாக காண்பித்தது.
இதனை அறிந்த தூத்துக்குடி மாவட்ட தனிப்படையினர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜபிரபு தலைமையில், போலீஸ்காரர் டேவிட்ராஜன் உள்பட 4 பேர் சம்பவ இடத்துக்கு புறப்பட்டு சென்றனர். அவர்கள் செல்போன் டவர் காண்பித்த இடத்தை தொடர்ந்து சென்றனர். அப்போது அந்த காட்டுப்பகுதியில் கைவிடப்பட்ட காற்றாலை இருந்த இடத்தில் உள்ள ஒரு பாழடைந்த கட்டிடத்தில் துரைமுருகன் மற்றும் அவரது கூட்டாளிகளான திருச்சியை சேர்ந்த ஆரோக்கியராஜ், தூத்துக்குடியை சேர்ந்த ராஜா ஆகியோருடன் பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதனால் போலீசார் அந்த கட்டிடத்தை சுற்றி வளைத்தனர்.
அப்போது, அங்கு இருந்த துரைமுருகன் உள்ளிட்ட 3 பேரும் தப்பி ஓட முயன்றனர். அவர்கள் சிறிது தூரம் தப்பி ஓடி உள்ளனர். ஆனால் போலீசார் தொடர்ந்து சுற்றி வளைத்ததால் துரைமுருகன் கையில் வைத்த இருந்த அரிவாளால் சரமாரியாக வெட்ட பாய்ந்து உள்ளார். இதில் போலீஸ்காரர் டேவிட்ராஜனுக்கு அரிவாள் வெட்டு விழுந்து உள்ளது. அந்த நேரத்தில் ஆரோக்கியராஜ், ராஜா ஆகியோர் தப்பி சென்று உள்ளனர்.தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் ராஜபிரபுவையும் துரைமுருகன் வெட்டி உள்ளார். இதனால் ராஜபிரபு வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு எச்சரிக்கை செய்தாராம். தொடர்ந்து துரைமுருகன் அவரை தாக்க முற்பட்டதால், சப்-இன்ஸ்பெக்டர் ராஜபிரபு துப்பாக்கியால் துரைமுருகனை சுட்டார். இதில் ரத்த வெள்ளத்தில் துரைமுருகன் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த தென்மண்டல ஐ.ஜி. அன்பு, நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவின்குமார் அபிநபு, தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், தூத்துக்குடி ஊரக உதவி போலீஸ் சூப்பிரண்டு சந்தீஷ், தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ், முத்தையாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயசீலன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு காயம் அடைந்த போலீசாரை மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். துரைமுருகனை உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக முத்தையாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி அருகே போலீசாரால் என்கவுன்டர் செய்யப்பட்ட பிரபல ரவுடி துரைமுருகன் கூட்டாம்புளி திருமலையாபுரத்தை சேர்ந்தவர். இவர் சமீபகாலமாக அத்திமரப்பட்டியில் வசித்து வந்தார். இவர் கடந்த 2001-ம் ஆண்டு முதல் முறையாக முத்தையாபுரம் பகுதியில் நடந்த ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து அவர் படிப்படியாக பல்வேறு சம்பவங்களில் ஈடுபட்டு வந்தார். தொடர்ந்து தூத்துக்குடி அருகே உள்ள தட்டப்பாறை, சாயர்புரம், தென்பாகம், மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், ஊமச்சிகுளம், ஒத்தக்கடை, பெருங்குடி, திருமங்கலம், திருவண்ணாமலை மாவட்டம் வனப்புரம், ராமநாதபுரம் மாவட்டம் பஜார் போலீஸ் நிலையம், கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம், தென்காசி மாவட்டம் பாவூர் சத்திரம் ஆகிய போலீஸ் நிலையங்களில் வழக்குகள் உள்ளன. இவர் மீது மொத்தம் 35 வழக்குகள் உள்ளன. கடைசியாக 2021-ம் ஆண்டு தென்காசி பாவூர் சத்திரத்தில் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
முடிவுக்கு வந்த தேடுதல்!
இவர் 2012-ம் ஆண்டு முதல் குற்றவாளிகள் பட்டியலில் சேர்க்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தார். 2 முறை குண்டர் தடுப்பு சட்டத்தில் ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளார். துரைமுருகன் கடந்த 2017-ம் ஆண்டு பாவூர்சத்திரத்தில் ஒரு திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார். அந்த வழக்கில் கடந்த மாதம் 3-ந் தேதி ஜெயிலில் இருந்து விடுதலையாகி வந்து உள்ளார். இதைத் தொடர்ந்து கடந்த 7-ந் தேதி பாவூர்சத்திரத்தில் நடந்த கொலை வழக்கில் சிக்கி உள்ளார். தொடர்ந்து அவரை போலீசார் தேடி வந்தபோது சம்பவம் நடந்து உள்ளது. 2001-ல் தொடங்கிய துரைமுருகனின் ரவடியிசம் 2021-ல் முடிவுக்கு வந்து உள்ளது.
தூத்துக்குடி அருகே போலீசாரால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட துரைமுருகன் மீது 7 கொலை வழக்குகள் உள்ளன. இவர் தனக்கென தனி பாணியில் கொலை சம்பவங்களை அரங்கேற்றி உள்ளார். இவர் பெண்கள் தொடர்பான தகராறிலேயே பெரும்பாலான கொலைகளை செய்து உள்ளார். பெரும்பாலும் ஆட்களை யாருக்கும் தெரியாமல் கடத்தி சென்று கொலை செய்து புதைத்து விடுவது வழக்கம். இதனால் போலீசார் கடத்தப்பட்டவரை காணவில்லை என்றே முதலில் வழக்கு பதிவு செய்து உள்ளனர். அதன்பிறகு விசாரணையில் துரைமுருகனால் கொன்று புதைக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, கைது செய்யப்பட்டு உள்ளார்.
என்னென்ன வழக்குகள் உள்ளது?
2001-ம் ஆண்டு முத்தையாபுரம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சீனி என்ற சீனவாசகம் என்பவரை முன்விரோதம் காரணமாக கொலை செய்த வழக்கு,2003-ம் ஆண்டு தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தங்கம் மகன் செல்வம் என்பவரை கடத்திச் சென்று கொலை செய்து உடலை புதைத்த வழக்கு, 2003-ம் ஆண்டு தென்பாகம் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஸ்டாலின் என்பவரை கடத்திச் சென்று கொலை செய்து, உடலை புதைத்த வழக்கு,2003-ம் ஆண்டு தட்டப்பாறை போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ரஜினி என்ற ரஜினிகாந்த என்பவரை பணத்துக்காக கடத்திச் சென்று கொலை செய்து, உடலை புதைத்த வழக்கு,2010-ம் ஆண்டு திருவண்ணாமலை மாவட்டம் வனப்புரம் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் பாலமுருகன் என்பவரை கொலை செய்த வழக்கு,2011-ம் ஆண்டு மதுரை மாவட்டம், ஒத்தக்கடை போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கொடிக்குளம் குமார் என்பவரின் மகன் மணிமொழி (44) என்பவரை கடத்திச் சென்று கொலை செய்து உடலை யாருக்கும் தெரியாமல் புதைத்த வழக்கு,2021-ம் ஆண்டு பாவூர்சத்திரத்தில் பூகட்டும் தொழிலாளி ஜெகதீசை கடத்தி கொலை செய்த வழக்கு, ஆகிய 7 கொலை வழக்குகளில் ஈடுபட்டு உள்ளார்,இவர் மீது 7 கொலை வழக்கு, 21 கொள்ளை வழக்கு, 6 திருட்டு வழக்கு, ஒரு கொலைமிரட்டல் வழக்கு ஆகிய 35 வழக்குகள் உள்ளன. இவருக்கு ரேகா என்ற மனைவி உள்ளார்.