சென்னையில் மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறில் பிரபல ரவுடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, புளியந்தோப்பு, வாசுகி நகர் பகுதியைச் சேர்ந்தவர் மாரி என்கின்ற லொடங்கு மாரி ( 40) இவருக்கு திருமணம் ஆகி பார்வதி என்கின்ற மனைவியும் ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இவர் புளியந்தோப்பு பகுதியில் வட்டிக்கு விடும் தொழில் செய்து வந்தார்.
இவர் மீது புளியந்தோப்பு, பேசன் பிரிட்ஜ், கொடுங்கையூர் உள்ளிட்ட காவல் நிலையங்களில் 29 வழக்குகள் உள்ளன . நேற்று (அக்.20) இரவு லொடங்கு மாரி மற்றும் அவரது நண்பர்களான புளியந்தோப்பு கன்னிகாபுரம் 7ஆவது தெருவைச் சேர்ந்த கொருக்குப்பேட்டை மாரி, அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (எ) பிள்ளை கார்த்திக், மணிகண்டன் (எ) கருப்பா, மார்ட்டின், லட்சுமணன் ஆகிய ஐந்து பேர் புளியந்தோப்பு கன்னிகாபுரம் வாசுகி நகர் 2ஆவது தெரு பகுதியில் உள்ள கால்வாய் அருகே அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தனர்.
தொடர்ந்து இரவு 11 மணியளவில் போதை தலைக்கு ஏறியதும் இவர்களுக்குள் வாக்குவாதம் முற்றத் தொடங்கியுள்ளது. அப்போது லொடங்கு மாரிக்கும், கொருக்குப்பேட்டை மாரிக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது கொருக்குப்பேட்டை மாரி தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சரமாரியாக லொடங்கு மாரியை வெட்டினார். இதனைத் தொடர்ந்து லொடங்கு மாரியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வர, அங்கிருந்த 5 பேரும் தப்பி ஓடினர்.
இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் புளியந்தோப்பு காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்த நிலையில், இத்தகவலின் பெயரில் அங்கு வந்த புளியந்தோப்பு காவல்துறையினர் லொடங்கு மாரியை உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைப் பெற்று வந்த லொடங்குமாரி நேற்று சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த புளியந்தோப்பு காவல் துறையினர் கொருக்குப்பேட்டை மாரி உள்பட அவரது நண்பர்கள் ஐந்து பேரைத் தேடி வருகின்றனர்.
மது போதையில் ஏற்பட்ட தகராறில் பிரபல ரவுடியை நண்பர்களே கொலை செய்த சம்பவம் புளியந்தோப்பு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மற்றொரு சம்பவம்