கோவை அருகே சூர்யா நடித்த தானா சேர்ந்த கூட்டம் படத்தில் வருவதைப் போல வருமான வரித்துறை அதிகாரிகள் போல் நடித்து லாரி உரிமையாளர் வீட்டில் 20 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்ற டிப்டாப் ஆசாமிகள் காவல்துறையினர் தேடி வருகின்றனர். சூர்யா, கீர்த்தி சுரேஷ், ரம்யா கிருஷ்ணன் நடித்து 2018ல் வெளிவந்த திரைப்படம் தானா சேர்ந்த கூட்டம். விக்னேஷ் சிவன் இயக்கிய இந்த திரைப்படத்தில் சூர்யா மற்றும் குழுவினர் பெரிய பெரியப் பணக்காரர்கள், தொழில் அதிபர்கள், அரசியல்வாதிகள் வீட்டில் ரெய்டு செல்வது போல நடித்து, பணத்தை கொள்ளை அடித்து செல்வார்கள்.


இந்த படம் இந்தியில் வெளியான அக்ஷய் குமாரின் ஸ்பெஷல் 26 திரைப்படத்தின் தழுவல் ஆகும். வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்ப்பது வரு மானத்தை மறைப்பது போன்ற குற்றங்களில் ஈடுபடும் நபர்கள் அல்லது வரும் புகார்கள் குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்துவது வழக்கம். அவ்வாறு சோதனை நடத்த வரும் போது உரிய ஆவணங்கள் மற்றும் உள்ளூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல விதிமுறைகள் உள்ளன. இந்த நிலையில் தானாசேர்ந்தகூட்டம் திரைப்படத்தில் வருவது போல லாரி உரிமையாளர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிபோல் நடித்து சோதனை நடத்துவதாக கூறி லட்சம் ரூபாய் பணம் செக்புக் மற்றும் ஆவணங்களை எடுத்துச் சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்



கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே காந்திநகரை சேர்ந்தவர் பஞ்சலிங்கம் என்பவர் கல்குவாரி உரிமையாளராக உள்ளார். இவரது வீட்டிற்கு 5 மர்மநபர்கள் டிப்&டாப் உடையுடன் காரில் வந்து இறங்கி உள்ளனர். வீட்டிற்குள் சென்ற அவர்கள் தாங்கள் வருமானவரித் துறையில் இருந்து வருவதாக கூறி ஒரு போலி அடையாள அட்டையை காண்பித்துள்ளனர். அதன்பிறகு கல்குவாரி உரிமையாளர் பஞ்சலிங்கத்தை ஒரு அறையில் வைத்து பூட்டி விட்டு வீடு முழுவதும் சோதனை மேற்கொண்டுள்ளனர். வீடு முழுவதும் தேடி அறையில் இருந்து ரூ.20 லட்சம் மற்றும், அவரது ஜி.எஸ்.டி. ஆவணங்கள், 5 காசோலைகள், செல்போன், சி.சி.டி.வி காமிரா, ஹார்டு டிஸ்க் உள்ளிட்டவற்றை எடுத்துக்கொண்டு, இவற்றுக்கு கணக்கு காண்பித்துவிட்டு அலுவலகத்திற்கு விசாரணைக்கு வந்தபிறகு வாங்கிக்கொள்ளுமாறு கூறிவிட்டு வண்டியில் கிளம்பியுள்ளனர். பஞ்சலிங்கத்திடம் காலை அலுவலகத்துக்கு விசாரணைக்கு வர வேண்டும் என கூறிவிட்டு புறப்பட்டுள்ளனர்.



இருப்பினும் வந்தவர்களின் நடவடிக்கைகளில் சந்தேகம் அடைந்த பஞ்சலிங்கம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில்,  கடந்த 10 நாட்களுக்கு முன்பு பஞ்சலிங்கம் கல்குவாரியில் இருந்தபோது காரில் 4 பேர் வந்தனர். அவர்கள் தாங்கள் ஊட்டி யில் இருந்து வருவதாகவும், தங்களுக்கு உங்களிடம் இருந்து கல் உள்ளிட்ட பொருட்கள் தேவை என கூறியதும், சில நாட்கள் கழித்து வந்து வாங்கி கொள்வதாகவும் தெரிவித்தனர். ஆனால் அவர்கள் அதன்பின்னர் வரவில்லை என்னும் தகவல் தெரியவந்தது. இதனால் அந்த நபர்கள் தான் வருமானவரித்துறை அதிகாரிகளாக நடித்து பணத்தை அபேஸ் செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர்.


இதையடுத்து மர்ம நபர்களை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசாரில் ஒரு குழுவினர் ஊட்டிக்கும், மற்றொரு குழுவினர் திருச்சிக்கும் சென்றுள்ளனர். அங்கு பல இடங்களில் மர்மநபர்கள் குறித்து விசாரித்து தேடி வருகிறார்கள். 3-வது குழுவினர் கல்குவாரி உரிமையாளர் வீட்டில் உள்ள சி.சி.டி.வி கேமராவில் பதிவாகி உள்ள காட்சிகள் உள்ளிட்டவைற்றை பறிமுதல் செய்து ஆய்வு செய்து வருகின்றனர். விரைவில் அந்த கும்பலை பிடிப்போம் என்று போலீசார் உறுதிகூறியுள்ளனர்.