நெல்லை மாவட்டம் கரையிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் மாயாண்டி (53). இவர் ஆடு வளர்ப்பில் ஈடுபட்டு வருவதுடன் பிற இடங்களில் இருந்து ஆடுகளை வாங்கி கறிக்காக விற்பனை செய்யும் தொழிலும் செய்து வருகிறார். இந்த சூழலில் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று உள்ளூர் பகுதியைச் சேர்ந்த ஒரு சிலர் மாயாண்டியை வீட்டிலிருந்து அழைத்து சென்றுள்ளனர். அன்றைய தினம் வெகு நேரம் ஆகியும் மாயாண்டி வீடு திரும்பாத நிலையில் அவரது உறவினர்கள் பல இடங்களில் விசாரித்ததுடன் தேடியும் அலைந்துள்ளனர். எங்கேயும் அவரை காணாத நிலையில் தச்சநல்லூர் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணையும் மேற்கொண்டு உள்ளனர். இருப்பினும் அவரை கண்டுபிடிக்காததால் ஆத்திரமடைந்த உறவினர்கள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறி ஊர் பொதுமக்களுடன் சேர்ந்து நெல்லை - மதுரை நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாலை நேரத்தில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தால் சென்னையில் இருந்து நெல்லை நோக்கி வந்த தனியார் மற்றும் அரசு பேருந்துகள், பள்ளிக்குச் செல்லக்கூடிய வாகனங்கள் என பல்வேறு வாகனங்கள் சாலை மறியல் போராட்டத்தால்  நீண்ட வரிசையில் நின்றது.




இதுகுறித்த தகவலறிந்த போலீசார் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், அதை ஏற்க மறுத்து  தொடர்ந்து சாலையில் அமர்ந்து கரையிருப்பு பகுதி மக்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். இந்த நிலையில் நெல்லை மாநகர காவல்துறை துணை ஆணையாளர்கள் ஸ்ரீனிவாசன் மற்றும் அனிதா ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஓரிரு நாட்களில் காணாமல் போனவரை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து  போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.




இந்த சூழலில் தாழையுத்து ஹவுசிங் போர்டு காலனி பகுதி அருகே உள்ள காட்டுப் பகுதியில் மாயாண்டின் உடல் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததுள்ளது. அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அழுகிய நிலையில் உடலை மீட்டனர். மேலும் பிரேத பரிசோதனைக்காக ஆம்புலன்ஸ் மூலம் நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உடலை கைப்பற்றிய நிலையில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். குறிப்பாக மாயாண்டியை அவரது நண்பர்கள் அழைத்து சென்று குடிக்க வைத்து கொலை செய்தார்களா? அல்லது வேறு எதுவும் காரணமா என விசாரணை நடத்தி வருகின்றனர். இருப்பினும் உடல் அழுகிய நிலையில் இருப்பதால் பிரேத பரிசோதனைக்கு பின்னரே முழு விவரம் தெரிய வரும் என காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண