காவல்துறையினர் கண் முன்னேயே பழங்குடியினர் இரண்டு பேர் வலதுசாரி இயக்கத்தினரால் அடித்து கொலை செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் சியோனி மாவட்டத்தில் கடந்த மே2ம் தேதி அன்று மாட்டுக்கறி வைத்திருந்ததாகவும், பசுவை வதை செய்ததாகவும் கூறி தன்ஷா இனவதி மற்றும் சம்பத் வதி என்ற இரண்டு பழங்குடியினரை பஜ்ரங் தள் மற்றும் ராமசேனா அமைப்பைச் சேர்ந்தவர்கள் அடித்துக் கொன்றதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், காவலர்கள் கண் முன்பே தான் இருவரும் அடித்துக் கொலை செய்யப்பட்டதாக இந்த தாக்குதலில் இருந்து தப்பித்த மற்றொரு பழங்குடியின இளைஞரான ப்ரஜேஷ் வதி தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், வீட்டின் வெளியே ஏதோ கூச்சல் சப்தம் கேட்டு, சென்று பார்த்த போது, எனது வீட்டின் அருகாமையில் இருப்பவரை பஜ்ரங் தள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் கடுமையாக தாக்கிக்கொண்டிருந்தனர். நான் அதை தடுக்க முயன்ற போது அவர்கள் என்னையும் தாக்கினர். காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்த பின்னரும் கூட சம்பத்தை அவர்கள் தாக்கினர் என்று கூறியுள்ளார்.
வீட்டுக்குள் இருந்த தன்ஷாவை வெளியே இழுத்துவந்து 20க்கும் மேற்பட்டவர்கள் தாக்கியதாகவும், அவரை அடிக்க வேண்டாம் என்று அந்த கும்பலிடம் கெஞ்சியபோது அவர்களுக்கும் சேர்த்து அடி விழுந்ததாகவும், தன்ஷாவின் மருமகள் ஊர்மிளா இனவதி குற்றம்சாட்டியுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை 13 பேரை கைது செய்துள்ள காவல்துறையினர் விசாரணைக்காக 4 பேரை விசாரணைக்காக வைத்துள்ள நிலையில் மற்ற 9 பேர் மீதும் ஐபிசி 302 பிரிவு மூன்றின் கீழ், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஜபல்பூர் பகுதியின் ஐஜி உமேஷ் ஜோகா, இந்த சம்பவத்தில் பஜ்ரங் தள் மற்றும் சில வலதுசாரி அமைப்புகள்தான் குற்றவாளிகள் என்று குற்றம்சாட்டப்படுகிறது. ஆனால் அந்த தகவல் இன்னும் உறுதிபடுத்தப்படவில்லை என்று கூறியுள்ளார்.
ஆனால், குரை பகுதியின் காவல்நிலையப் பொறுப்பாளரான ஜிஎஸ் உகி, கைது செய்யப்பட்டுள்ள 13 பேரில் 3 பேர் பஜ்ரங்தள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்றும் 6 பேர் ராம சேனா அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறியுள்ளார்.
பஜ்ரங் தள் மற்றும் ராமசேனா அமைப்பினரோ இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளனர். தாங்கள் மாட்டுக்கறி மற்றும் இரண்டு பேரையும் காவல்துறையினரிடம் ஒப்படைத்துவிட்டதாகவும், அதற்குப் பிறகு காவல் நிலையத்தில் என்ன நடந்தது என்று தெரியாது என்றும் கூறியுள்ளனர்.
உயிரிழந்த சம்பத் வாதியின் மனைவியான மத்தோ பாய், நாங்கள் இழப்பீடை பெற்றுக்கொள்ளப்போவதில்லை. நாங்கள் பேராசைக்காரர்கள் இல்லை. ஆனால், குற்றவாளிகள் தண்டிக்கப்படும் வரை போரோடுவேன். இன்று நான் பின்வாங்கினால் நாளை மற்றொருவருக்கு இது நிகழலாம். நான் பின்வாங்கப்போவதில்லை என்று கூறியிருக்கிறார்.
கடந்த சில மாதங்களாக பசு பாதுகாவலர்களால் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருந்த நிலையில் தற்போது இச்செயல் மீண்டும் அரங்கேறத்தொடங்கியிருக்கிறது.