நீட் தேர்வு தான் தெரியும் அதென்ன ரீட் தேர்வு என்பவர்களுக்கான விளக்கம். ரீட் என்பது Rajasthan Eligibility Exam for Teachers. அதாவது ராஜஸ்தான் மாநிலத்தில் ஆசிரியர்களுக்காக நடத்தப்படும் நுழைவுத் தேர்வு. இது ராஜஸ்தான் மாநில உயர்கல்வித் துறையால் நடத்தப்படுகிறது. 


இந்தத் தேர்வை எழுதவந்தவர்கள் ப்ளூடூத் செருப்பு மூலம் காப்பியடிக்க மேற்கொண்ட முயற்சி அம்பலமாகியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் 33 மாவட்டங்களில் சுமார் 3993 மையங்களில் இந்தத் தேர்வு நடந்தது. இரண்டு ஷிஃப்ட்களில் நேற்று (செப்.26) இந்தத் தேர்வு நடைபெற்றது. மொத்தம் 16.51 லட்சம் பேர் இந்தத் தேர்வை எழுத விண்ணப்பித்திருந்தனர். இந்தத் தேர்வை ஒட்டி தீவிர கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இருப்பினும் பிகானர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் இந்தத் தேர்வில் நூதன மோசடி நடந்துள்ளது. பிகானர் மாவட்டத்தில் ஒரு தேர்வு மையத்தில் 5 பேர் ப்ளூடூத் சாதனம் பொருத்திய பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட செருப்பை அணிந்து மோசடியில் ஈடுபட முயன்றது அம்பலமானது.


ரூ.6 லட்சம் விலை:


ஒரு செருப்பின் விலை ரூ.6 லட்சம். இதுபோன்று 25 நபர்களுக்கு இந்த ப்ளூடூத் செருப்பு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த செருப்பை அணிந்து வந்தவர்கள் தேர்வுக்கு முன்னதாகவே கைது செய்யப்பட்டனர். கங்காசாஹர் காவல்துறையினருக்கு முன் கூட்டியே கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்றது. சோதனையின் போது செருப்பும் மற்ற சாதனங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ப்ளூடூத் செருப்பை விற்பனை செய்தது தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.




இந்தக் கும்பலின் முக்கியப் புள்ளி தலைமறைவான நிலையில் அவரைத் தேடி வருவதாக பிகானர் காவல்துறை கண்காணிப்பாளர் ப்ரீத்தி சந்திரா தெரிவித்துள்ளார். கைதான இருவரில் ஒருவர் மதன் லால், மற்றொருவர் திரிலோக்சந்த். இவர்கள் தங்களின் உறவினர்களுக்காக இந்த பிரத்யேக ப்ளூடூத் செருப்பை விற்பனை செய்ய, அவர்கள் மூலமாக மொத்தம் 25 பேருக்கு செருப்பு விற்பனையாகியுள்ளது. இதேபோல் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டதாக டவுஸா மற்றும் ஜெய்ப்பூர் பகுதிகளில் மொத்தம் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


ப்ளூடூத் செருப்பு எப்படி இயங்கும்?


ரூ.6 லட்சத்துக்கு விற்பனை செய்யப்படும் ப்ளூடூத் செருப்பில் பிரத்யேகமாக ஒரு காலிங் டிவைஸ் இருக்கும். அதிலிருந்து குறிப்பிட்ட ஒரு எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். அந்த எண்ணில் மறுமுனையில் பேசும் நபருக்கு ஏற்கெனவே கேள்வித்தாள் சென்றிருக்கும். அவர் அங்கிருந்து கேள்வி 1க்கு A, 2க்கு D  என்றெல்லாம் ப்ராம்ப்ட் பண்ணுவார். அது தேர்வு எழுதும் நபரின் காதுக்குள் இருக்கும் சிறிய ப்ளூடூத் டிவைஸ் மூலம் அவர் காதில் கேட்கும். இந்த சாதனத்தை யாரும் பார்க்கமுடியாது. அவ்வளவு சிறிய சாதனம்.  வசூல்ராஜா எம்பிபிஎஸ் படத்தில் கமல் தேர்வு எழுதும் காட்சி நம் கண் முன்னே வந்து செல்கிறது அல்லவா? தொழில்நுட்ப வளர்ச்சிகள் நன்மைக்காகவேத்தானே தவிர, இது போன்ற தவறுகளுக்காக அல்ல.