மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் காவல் சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் சமீப காலமாக தொடர்ந்து கோயில்களில் உள்ள சிலைகள், சிலைகளில் உள்ள நகைகள் போன்றவை அடையாளம் தெரியாத நபர்களால் திருடப்பட்டு வந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா உத்தரவின்படி, மயிலாடுதுறை துணை காவல் கண்காணிப்பாளர் வசந்தராஜ் மேற்பார்வையில் தனிப்படை காவல் உதவி ஆய்வாளர் இளையராஜா தலைமையில் 6 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டனர்.
தனிப்படை போலீசார் திருடப்பட்ட இடங்களில் உள்ள சிசிடிவி பதிவுகளை கொண்டு தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் மயிலாடுதுறை அருகேயுள்ள கடலங்குடி, தெற்கு கார்குடியைச் சேர்ந்த அண்ணாதுரை என்பவரின் மகன் 38 வயதான கார்த்திகேயன், தஞ்சாவூர் மாவட்டம், இடையநல்லூர், காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த ராமசாமி என்பவரின் மகன் 42 வயதான பாஸ்கர் ஆகிய 2 பேரும் சிலைகளை திருடியது தெரியவந்தது.
இதனை அடுத்து இருவரையும் கைது செய்த போலீசார், திருடி விற்பனைக்காக வைத்திருந்த சிவராமபுரம் காவிரி கரை அருகில் உள்ள விநாயகர் கோயிலிலிருந்து திருடப்பட்ட ஒரு கருங்கல் விநாயகர் சிலை, 1,100 கிராம் எடையுள்ள பித்தளை பூஜை மணிகள், பித்தளை தொங்கு தூண்டா விளக்குகள், சிவராமபுரம் ஸ்ரீராகவேந்திரா மடத்திலிருந்து திருடப்பட்ட 8 கிலோ எடை, அரை அடி உயரம் கொண்ட வீர பிரம்ம கோவிந்தம்மாள் உலோகச் சிலை, 15 கிலோ எடை, முக்கால் அடி உயரம் கொண்ட 25 ஆயிரம் ரூபாய் மதிப்புடைய தலை மற்றும் கைகள் துண்டிக்கப்பட்ட ராஜராஜேஸ்வரி அம்மன் சிலை, திருவாலாங்காடு மஞ்சலாற்றங்கரையில் உள்ள மாரியம்மன் கோயிலிலிருந்த ஒரு அடி உயரமுடைய ஐய்யப்பன் பித்தளை சிலை, 1 கிராம் கொண்ட 4 தாலிகள், சிவராமபுரம் அக்ரஹாரத்தில் உள்ள நாராயணசாமி என்பவர் வீட்டில் திருடப்பட்ட 17.5 கிராம் எடை கொண்ட தாலி, குண்டு, நாணல்கள் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர்.
தொடர்ந்து கைப்பற்றப்பட்ட சிலைகள் மற்றும் நகைகளுடன் கைது செய்யப்பட்ட இருவரையும் தனிப்படை போலீசார் குத்தாலம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அதனை அடுத்து மீட்கப்பட்ட கோயில் சிலைகளை நேரில் வந்து பார்வையிட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எஸ் நிஷா துரிதமாக செயல்பட்டு கோயில் சிலைகளை மீட்ட தனிப்படை போலீசாருக்கு பாராட்டு தெரிவித்து நற்சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்