Crime: பெங்களூருவில்  பெண் ஒருவரை,  ஆட்டோவில் இருந்து ஓட்டுநர் தூக்கி வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


ரேபிடோ சேவை:


ரேபிடோ பைக் டாக்சி மீதான புகார்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. குறிப்பாக, வாகனத்தில் வரும் பெண்களை பாலியல் வன்புணர்வு செய்தது உள்ளிட்ட பல்வேறு புகார்கள் பெங்களூரு, டெல்லி, தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பதிவாகி உள்ளது.  இதனால், பெண்களுக்கு உரிய பாதுகாப்பு இருப்பதில்லை எனவும் இந்த சேவையை நிறுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.  இந்நிலையில்,  தற்போது ஒரு சம்பவம் பெங்களூருவில் அரங்கேறியுள்ளது. 


ஆட்டோவில் இருந்து தூக்கி வீசப்பட்ட பெண்:


இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் நண்பர், அவரது ட்விட்டர்  பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். அதன்படி, பெங்களூருவைச் சேர்ந்த ஒரு பெண் நேற்று இரவு ரேபிடோ ஆட்டோவை புக் செய்திருக்கிறார். சிறிது நேரம் கழித்து அவர் புக் செய்த  இடத்திற்கு வந்த ஆட்டோ, அவரை ஏற்றிக் கொண்டு புறப்பட்டது. அப்போது, அந்த ஓட்டுநர் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தெரிகிறது. இதனை தடுக்க அந்த பெண்ணை, ஓடும் ஆட்டோவில் இருந்து கீழே தள்ளிவிட்டதாக கூறப்படுகிறது. இதனால், அந்த பெண்ணுக்கு சிறிது காயம் ஏற்பட்டுள்ளது.






இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் நண்பர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது, ”ரேபிடோ நிறுவனம் பாலியல் புகாரில் அதிகளவில் எழுந்துள்ளது. ரேபிடோ  ஆப்பை யாரும் பயன்படுத்தாதீர்கள். எனது நண்பர் ஆட்டோ ஓட்டுநரால் நேற்று இரவு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார். தகாத முறையில் என் நண்பரை தொட்டுள்ளார். இதனை என் நண்பர் தடுத்தபோது, ​​ஓடும் ஆட்டோவில் இருந்து தூக்கி வீசப்பட்டார்"  என்று பதிவிட்டிருந்தார்.   இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அறிந்த போலீசார் ஆட்டோ ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 


இதுகுறித்து ரேபிடோ நிறுவனம் கூறுகையில், “இந்த சம்பவத்தை தொடர்ந்து, ஆட்டோ ஓட்டுநர் நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளார். ஓட்டுநரின் தகாத செயலுக்கு மன்னிக்கவும். இதுபோன்று இனி நடக்காது" என்று கூறியுள்ளது.