சென்னை அடுத்த போரூரிலிருந்து குன்றத்தூர் நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது போரூர் - குன்றத்தூர் சாலையில், கெருகம்பாக்கம் அருகே சென்று கொண்டிருந்தபோது அரசு பேருந்தில் பயணம் செய்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பேருந்தின் படிக்கட்டில் தொங்கிய படியும் பஸ்சின் கூரை மீது ஏறி நின்றபடியும் பயணம் செய்தனர். இதனை பின்னால் வந்த பெண் தனது செல்போனில் வீடியோ எடுத்துக்கொண்டு வந்ததுடன் பஸ் நிறுத்தத்தில், பஸ் நின்றவுடன் கீழே இறங்கி சென்று, அரசு பேருந்தை ஓட்டி வந்த டிரைவரிடம் மாணவர்கள் தொங்கி கொண்டு வருகிறார்கள்.
இப்படியா பஸ் ஓட்டுவது என திட்டி விட்டு அங்கிருந்து சென்ற பெண் பஸ்சின் முன் மற்றும் பின் பகுதியின் படிக்கட்டில் நின்று கொண்டிருந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை அடித்தபடியும், திட்டியபடியும் கீழே இறக்கி விட்டார். மேலும் பஸ்சின் பின் படிக்கெட்டில் நின்று கொண்டிருந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை இழுத்து, வைத்து முதுகில் அடித்து சட்டையை பிடித்து இழுத்து, பஸ்சிலிருந்து இறக்கி விட்டு நடந்துசெல்லும் படி கூறினார். மேலும் தான் ஒரு போலீஸ், என கூறிய அந்த பெண் மாணவர்களை அடித்து, கீழே இறக்கி விட்ட பின்பு பஸ்சில் இருந்த கண்டக்டரிடம் அரசு பேருந்தை ”இப்படித்தான் ஓட்டுவீங்களாடா பஸ்குள்ள இவ்வளவு பொம்பள இருக்கும்போது, யாரும் சொல்லலையா” என கண்டக்டரிடம் அவதூறாக பேசுவதும், இதனை கண்டதும் பஸ்சில் இருந்த பயணிகளும், பின்னால் வந்த வாகன ஓட்டிகளும் சிலைபோல் அப்படியே நின்று வேடிக்கை பார்ப்பதும் போன்ற காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
அரசு பேருந்தில் தொங்கியபடி சென்ற மாணவர்களை ஆவேசமாக அடித்து இறக்கிய பெண் போலீஸ் என கூறியதால் அவர் போலீசா என்பது குறித்து மேற்கொண்டு வந்தனர். அரசு பேருந்தில் தொங்கியபடி சென்ற மாணவர்களை கண்டித்து இறக்கியது நல்லதுதான். அதற்காக அரசு பஸ் மற்றும் கண்டக்டர்களை அவதூறாக, பேசிய பெண் செய்த செயல் முகம் சுளிக்கும் வகையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
நடிகை ரஞ்சனா நாச்சியாரை கைது
இந்த காட்சிகள் சமிக வலைதளத்தில் வைரலானது இந்த சம்பவத்தில் ஈடுபட்டது நடிகை ரஞ்சனா நாச்சியார் என்பது தெரிய வந்த நிலையில், இது சம்பந்தமாக அவரிடம் விசாரணை நடத்த மாங்காடு இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம் தலைமையில் போலீசார் அவரது வீட்டிற்குள் சென்று, ரஞ்சனா நாச்சியாரை கைது செய்து விசாரணைக்காக போலீஸ் நிலையம் அழைத்துச் சென்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.தற்போது நடிகை ரஞ்சனா நாச்சியார் வக்கீலாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
மாணவர்களை அடித்ததும் அரசு பஸ் கண்டக்டர் மற்றும் டிரைவர்களை அவதூறாக பேசியது அரசு பேருந்தை வழிமறித்தது உள்ளிட்ட சம்பவத்திற்காக கைது செய்து விசாரணைக்காக போலீசார் அழைத்துச் சென்றுள்ளனர். முன்னதாக காவலர்கள் கைது செய்ய வந்தபொழுது அவர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதே போன்று பெண் காவலர்கள் மூலமாகவே அவர் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.