ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு நகராட்சி நாதமுனி தெருவை சேர்ந்த ஆறுமுகம் என்பவரது மகன் மணிகண்டன் (28). இவர் சாக்லேட் விற்பனை செய்யும் கடையில் ஏஜெண்டாக பணிபுரிந்து வருகிறார்.இவரது நண்பரான தோப்புகானா பகுதியை சேர்ந்த அருண் (21) ஆகிய இருவரும் நேற்று வேப்பூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்திற்கு அருகே மது அருந்தியுள்ளனர். மது அருந்திவிட்டு தங்களது இருசக்கர வாகனத்தில் ஆற்காட்டில் உள்ள உணவகத்தில் சாப்பிடுவதற்காக சென்றுள்ளனர். சாப்பிட்டுவிட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பும் போது, தேசிய நெடுஞ்சாலையில் சென்னை நோக்கி சென்ற லாரி பைக்கை முந்த முயன்றதாக கூறப்படுகிறது.
ஒன்றையொன்று முந்த முயன்றதில் ஏற்பட்ட தகராறில் லாரி ஓட்டுநருக்கும், மணிகண்டன், அருண் ஆகியோருக்கும் இடையில் தகராறு ஏற்படுள்ளது. இதில் ஆத்திரமடைந்த லாரி ஓட்டுநர் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மணிகண்டன் மற்றும் அருணை சரமாரியாக வெட்டி விட்டு தப்பி சென்றுள்ளார். இதில் பலத்த வெட்டுக்காயமடைந்த மணிகண்டன், ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடியுள்ளார். இதனால் அருண் டூவீலரில் மணிகண்டனை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முயன்றதில், சிறிது தூரம் சென்றவுடன் மணிகண்டன் பரிதாபமாக இறந்துள்ளார். இதனால் மணிகண்டனின் சடலத்தை அங்கேயே போட்டுவிட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் வாலாஜா அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகச் சென்றதாக கூறப்படுகிறது.
இதுபற்றி தகவல் அறிந்த ராணிப்பேட்டை காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா, துணை கண்காணிப்பாளர் பூரணி மற்றும் ஆற்காடு நகர போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் வேலூரில் இருந்து மோப்ப நாய் சிம்பா வரவழைக்கப்பட்டு சம்பவம் நடந்த இடத்தில் தடயங்களை சேகரித்த போது, 2 கிலோமீட்டர் தூரம் ஓடிச்சென்று நின்றது. அருணின் உடலில் குறைந்த அளவிலான சிறு காயங்கள் மட்டுமே உள்ளதால், நண்பரால் மணிகண்டன் கொலை செய்யப்பட்டாரா? லாரியும்,பைக்கும் முந்த முயன்ற தகராறில் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் ஆற்காடு நகர போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் கொலை நடந்த பகுதிக்கு அருகே உள்ள வணிக வளாகங்கள் மற்றும் கட்டிடங்களில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து வருகின்றனர். மேலும் சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் சம்பவ இடத்தில் விழுந்து கிடந்த ஒரு செல்போனை போலீசார் கைப்பற்றினர். அந்த செல்போனுக்கு அப்போது அழைப்பு வந்தது. அதில் பேசியவர், ‘நீங்கள் யார் என்று கேட்டுள்ளார்.
அதனை என்னிடம் கொடுங்கள்' எனக்கூறி யுள்ளார். அதற்கு நாங்கள் காவல்துறையினர் பேசுகிறோம், .தொலைபேசி எங்களிடம் தான் உள்ளது. வந்து வாங்கிக் கொள்ளுங்கள்' என தெரிவித்துள்ளனர். அதனைத்தொடர்ந்து உஷாரான அந்த நபர் போனை துண்டித்து விட்டார். இதையடுத்து பேசியவரின் செல்போன் சிக்னலை வைத்து ஆய்வு செய்தபோது பானாவரம் பகுதியில் இருந்து சிக்னல் காட்டியுள்ளது. காவல்துறையினரும் பானாவரம் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். அதேபோல் செல்போன் எண்ணை வைத்து கொலையாளியை தேடிவருகின்றனர.