ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அடுத்த நாகலேரி கிராமத்தை சேர்ந்தவர் சிவகுமார்(52). விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினராக இருந்து வந்தார். இவரது மனைவி அலுமேலு. இந்த தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இந்நிலையில் அக்டோபர் 1ம் தேதி கலவை பஜார் பகுதிக்கு சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.
விசிக பிரமுகர் கொலை
அப்போது ஹெல்மெட் அணிந்து கொண்டு மர்ம கும்பல் அவரை பின்தொடர்ந்து வந்தது. அல்லலச்சேரி அருகே வந்தபோது சிவக்குமாரை அந்த மர்ம கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் சுத்துப்போட்டு தலை, முகம் உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பித்தனர். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.
இதையும் படிங்க: Madurai: கல்குவாரியில் 4 வயது சிறுவன் உடல்.. இளைஞர் சிக்கியது எப்படி? வாக்குமூலத்தை கேட்டு அதிர்ந்த போலீஸ்!
மறியல் போராட்டம்
இந்த சம்பவத்தை அடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சிவகுமார் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்ப ஏற்பாடு செய்தனர். ஆனால் கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை உடனே கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவதாக கூறியதை அடுத்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டு சிவகுமாரின் உடல் பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இன்ஸ்டாகிராமில் ஸ்டெட்டஸ்
இந்த கொலை சம்பவம் முன்விரோதம் காரணமாக நடைபெற்றதா? அல்லது வேறு ஏதேனும் காரணமாக என்ற கோணத்தில் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் இந்த கொலை சம்பவம் தொடர்பாக 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொலையில் தொடர்பு இருக்கலாம் என சந்தேகத்தின் பேரிலும், கொலைக்கு பிறகு இன்ஸ்டாகிராமில் கொலை தொடர்பாக ஸ்டெட்டஸ் வைத்ததாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் அகரம் கிராமத்தை சேர்ந்த கவியரசு, கானா மணி, சாரதி மற்றும் தினேஷ் ஆகிய 4 பேரை கைது செய்து விசாரித்த போது நண்பரின் கொலைக்கு வழிவாங்க விசிக பிரமுகர் கொலை செய்தாக அவர்கள் வாக்குமூலம் அளித்தனர். இதனையடுத்து கொலைக்கு உடந்தையாக இருந்த மேலும் 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
