ராமநாதபுரம் நேரு நகர் 5-வது தெரு பகுதியைச் சேர்ந்தவர் செல்வம். தனியார் திருமண மஹால் ஒன்றில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். மூத்தமகள் சுவாதி (வயது27) என்பவருக்கு திருமணம் செய்ய மாப்பிள்ளை பார்த்தபோது மறுத்துள்ளார். எம்.இ. படித்துள்ள இவர் மேலும் படிக்கவேண்டும் என மறுத்து வந்தாராம். இந்தநிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் சுவாதி வீட்டில் இருந்தபோது உடன்பிறந்த தம்பி சரவணன் என்ற சரண்குமார் (21) என்பவரால் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவரின் தந்தை செல்வம் அளித்த புகாரின் அடிப்படையில், ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் வழக்குபதிவு செய்து வந்தனர். அக்காவை கொலை செய்து விட்டு தலைமறைவான தம்பி சரண்குமாரை போலீசார் தேடிவந்தனர்.
இந்த நிலையில் மன்னார்குடி பகுதியில் தலைமறைவாக இருந்த சரண்குமார் நேற்று ராமநாதபுரம் வந்துள்ளார். அவரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குகனேஸ்வரன் தலை மையிலான போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். இவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தக வல்கள் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து போலீசார் தரப்பில் விசாரித்த போது..,”கொலை செய்யப்பட்ட சுவாதி ஆரம்பத்தில் படிக்க வேண்டும் என்று கூறி திருமணம் செய்ய மறுத்துள்ளார். இதனால் அவரின் தங்கை சுருதிக்கு மண்டபம் கேம்ப் பகுதியை சேர்ந்தவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளனர். இதன்பின்னர் சுவாதிக்கு மாப்பிள்ளை பார்த்தபோது அப்போதும் மறுத்துள்ளார். இதற்கான காரணம் கேட்டபோது உறவுக்காரர் ஒருவரை காதலிப்பதாகவும் அவரைத்தான் திருமணம் செய்வேன் என்றும் கூறியுள்ளார். இதற்கு முதலில் மறுத்த பெற்றோர் அதன்பின்னர் மகளின் பிடிவாதத்தை எண்ணி திருமணம் செய்து வைக்க சம்மதித்து உள்ளனர்.
இதனை தொடர்ந்து கடந்த 2 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்துள்ளனர். சமீபத்தில் திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே தனது அக்காள் சுவாதி காதலிக்கும் உறவுக்கார பையனை சரண்குமாருக்கு பிடிக்கவில்லையாம். இதனால் அக்காவிடம் வெளிப்படையாகவே நீ காதலிப்பவரை பிடிக்கவில்லை நீ அவரை திருமணம் செய்யக்கூடாது, வேறு மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து கொள், இனி அவருடன் பேசினால் நான் என்ன செய்வேன் என்று எனக்கே தெரியாது என்று கூறி வந்துள்ளார்.
இதற்கு சுவாதி மறுத்து பிடிவாதமாக இருந்துள்ளார். இதனால் இவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்தநிலையில் சம்பவத்தன்று வீட்டிற்கு சாப்பிட வந்த சரண்குமார் அக்காள் சுவாதியிடம் இன்னும் அந்த நபருடன் பேசிக்கொண்டுதான் இருக்கிறாயா என்று கேட்டுள்ளார். ஆமாம் இது என் வாழ்க்கை நான் தான் முடிவு செய்வேன் உன் வேலையை பார் என்று திட்டவட்டமாக கூறியுள்ளார்.
இதை கேட்டு ஆத்திரமடைந்த சரண்குமார் வீட்டில் கிடந்த அரிவாளை எடுத்து அக்கா என்றும் பாராமல் சரமாரியாக வெட்டியும், கழுத்தை அறுத்தும் கொலை செய்துள்ளார். ரத்த வெள்ளத்தில் கிடந்த அக்காவை அப்படியே போட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். கடந்த 3 நாட்களாக தலைமறைவாக இருந்த நிலையில் நேற்று அவரை கைது செய்துள்ளோம். இவ்வாறு கூறினர். கைது செய்யப்பட்ட சரவணன் என்ற சரண்குமார் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.