ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள புதுநகர் பகுதியில் வசித்து வருபவர் ஷாலினி. இவருக்கும் கள்ளிக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த சேதுபதி என்பவருக்கும் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் நடைபெற்றது. ஒரே சமூகத்தை சேர்ந்த இவர்கள், பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி நடைபெற்ற இந்த காதல் திருமணம் காவல் நிலையம் வரை சென்றதால், ஷாலினியின் தாய், தந்தையர், 'எங்கள் மகளுக்கும் எங்களுக்கும் எந்த தொடர்புமில்லை' என எழுதிக் கொடுத்து விட்டு சென்றுள்ளனர்.

 

இந்நிலையில், ஷாலினியின் கணவர் சேதுபதி வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஷாலினி தனது குழந்தைக்கு உடம்பு சரியில்லை என புது நகரில் உள்ள தனது கணவரின் சகோதரி வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த ஷாலினியின் உறவினர்கள் ஏன் இங்கு வந்தாய் உன்னை கொலை செய்யாமல் விடமாட்டோம் எனக்கூறி, அங்கு இருந்த ஷாலினியின் மாமனார் சுப்பிரமணியன் மற்றும் பெண்களை கல் மற்றும் கட்டையால் சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். 



 

இதுகுறித்து ஷாலினி, சுப்பிரமணியன் மற்றும் அவரது உறவினர் லலிதா காவல்துறையில் தனித்தனியே புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யாமல் இழுத்தடித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என கோரி ஷாலினி மற்றும் அவரது உறவினர்கள் கைக்குழந்தையுடன் எமனேஸ்வரம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

 

பின்னர், எங்களால் பாதுகாப்பாக வாழ முடியாத சூழ்நிலை உள்ளதாகவும், எங்களை கொலை செய்து விடுவதாக எதிர் தரப்பினர் மிரட்டி வருவதாகவும் கண்ணீர் மல்க கூறினர். இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உடனடியாக நடவடிக்கை எடுத்து கொலை வெறி தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து அவர்களை கைது செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.