கடலாடியில் அங்கன்வாடிக்கு சென்ற நான்கு வயது குழந்தையை தூக்கிச் சென்று பாலியல் வன்புணர்வில் ஈடுபட்ட காமக்கொடூரனை போலீசார் கைது செய்துள்ளனர்.

 

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த கண்பார்வையில் குறைபாடு உள்ள ஒருவர் தனது உறவினர்கள் உதவியுடன் கடலாடியில் சிறிய அளவிலான பெட்டிக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவர் இன்று காலை தனது 4 வயது மகளை கடலாடி வடக்கு ஊரணி கரையில் அமைந்துள்ள அங்கன்வாடிக்கு மையத்திற்கு அழைத்து சென்றுள்ளார்.

 

இந்நிலையில் இதனை நோட்டமிட்ட மேலகடலாடி பகுதியை சேர்ந்த குமரன் என்ற உத்தமநாதன் (40) என்பவன், தனது தந்தையுடன் நடந்து சென்ற குழந்தையை திடீரென அங்கன்வாடி அருகில் உள்ள மாடசாமி கோவில் அமைந்துள்ள காட்டுப் பகுதிக்கு  தூக்கிச் சென்றுள்ளான். 

 

மேலும், கண் பார்வையில் குறைபாடு உள்ள குழந்தையின் தந்தை அருகில் உள்ள அங்கன்வாடிக்கு போய்விட்டது என நினைத்து அவரது கடைக்கு திரும்பி உள்ளார்.

 

மேலும், சிறிது நேரம் கழித்து அவரது கடைக்கு வந்த அப்பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் உங்களுடைய குழந்தையை மேலகடலாடியை சேர்ந்த குமரன் என்ற உத்தமநாதன் மாடசாமி கோவில் பகுதிக்கு தூக்கிச் சென்றதை பார்த்ததாக கூறியுள்ளார்.

 

இதனையடுத்து குழந்தையின் தாய், தந்தை மற்றும் உறவினர்கள் பதறியடித்து அங்கன்வாடி மையத்திற்கு சென்று விசாரித்ததில் காலையிலிருந்து உங்களது குழந்தை மையத்திற்கு வரவில்லை என அங்கன்வாடி மைய பொறுப்பாளர் தெரிவித்துள்ளார்.

 

இந்நிலையில், பெற்றோர் மற்றும் அவரது உறவினர்கள் மாடசாமி கோவில் பகுதிக்கு சென்று தேடியபோது காட்டு கருவேல முட்புதரில் உடலில் பல்வேறு இடங்களில் காயங்களுடன் குழந்தை படுத்திருந்த நிலையில் அழுது கொண்டிருந்தது தெரியவந்தது. மேலும் உடனடியாக குழந்தையை மீட்ட உறவினர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

 

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் குழந்தையை ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சை மற்றும் உடல் பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, பெற்றோர் தெரிவித்த புகாரின் அடிப்படையில் மேல கடலாடி பகுதியில் பதுங்கி இருந்த குமரன் என்ற உத்தமநாதனை கைது செய்ததுடன் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

 

மேலும், சமீப காலங்களில் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருவது அப்பகுதி பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.