நடிகர் ராக்கி சாவந்தின் கணவர் அடில் துரானி மும்பை காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். தனது நிதியை தவறாகப் பயன்படுத்தியதாக ராக்கி அவருக்கு எதிராக புகார் அளித்ததை அடுத்து எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்ட நிலையில் மும்பை காவல்துறையால் அவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். ரியாலிட்டி ஷோக்களின் மூலம் பிரபலமானவர் ராக்கி சாவந்த் என்பது குறிப்பிடத்தக்கது.
அடில் துரானிக்கு எதிராக தற்போது ஐபிசி பிரிவு 406 மற்றும் 420ன் கீழ் மும்பை ஓஷிவாரா போலீசார் எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளனர். இதை அடுத்து மேலும் போலீசார் அதில் ஐபிசி 498 (ஏ) மற்றும் 377 ஆகிய பிரிவுகளையும் சேர்த்தனர். இதற்கிடையே அவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடில் தன்னைத் தாக்கி, தனக்குத் தெரியாமல் தனது வீட்டில் இருந்த பணம் மற்றும் நகைகளை எடுத்துச் சென்றதாக ராக்கி குற்றம் சாட்டியிருந்தார்.
மும்பையின் ஓஷிவாரா காவல் நிலையத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய ராக்கி, "அவர் காலையில் என்னை அடிக்க முயற்சி செய்தார். நான் உடனடியாக காவல்துறைக்கு போன் செய்தேன். அவர் அடிக்கடி என் வீட்டிற்கு வந்து எனக்கு மிரட்டல் விடுத்து வந்தார். இன்று என்னை அடிக்க முயற்சி செய்தபோது எனக்கு பயமாக இருந்தது. நான் ஊடகங்களில் அவரை தவறாகச் சித்தரித்ததாக அவர் குற்றம்சாட்டினார்” என ராக்கி கூறினார்.
ராக்கி சாவந்த கடந்த மாதம் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த ஒரு போஸ்ட்டில் தான் அடில் என்பவரை 2022-ல் திருமணம் செய்து கொண்டதை உறுதிபடுத்தி இருந்தார். மேலும் மே 29, 2022 அன்று திருமணம் நடைபெற்றதாகவும் அதற்கான சான்றிதழையும் அங்கே அவர் பகிர்ந்திருந்தார்.
அடில் திருமணம் கடந்த உறவில் ஈடுபட்டதாகவும் ராக்கி குற்றம் சாட்டியிருந்தார்.
ராக்கியின் சகோதரர் ராகேஷும் நடிகைக்கு ஆதரவு தெரிவித்ததோடு, அடில் ராக்கியை உடல் ரீதியாகத் துன்புறுத்தியதாக குற்றம் சாட்டியிருந்தார். “அவர் இப்படிக் கீழ்த்தரமாக செயல்படுவார் என நான் எதிர்பார்க்கவில்லை. இரண்டு மூன்று தடவை கூட மன்னித்தோம். அம்மா இறந்த மறுநாள் ராக்கி வீட்டுக்கு உணவளிக்கச் சென்றபோது ராக்கியின் முகம் வீங்கியிருப்பதைக் கவனித்தோம். அழுது கொண்டிருந்தார். எங்கள் உறவினர்கள் அவளிடம் கேட்டபோது, எங்கள் அம்மா இறந்த அதே நாளில் அடில் அவரை அடித்ததாக எங்களிடம் தெரிவித்தார்” என ராகேஷ் குறிப்பிட்டார். ராக்கியின் தாயார் இறந்த சில தினங்களில் இவர்கள் இருவருக்குமிடையிலான பிரச்னை வலுவடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.