ராஜஸ்தானில் இரண்டு கர்ப்பிணிகள் உள்பட மூன்று சகோதரிகள் குழந்தைகளுடன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அவர்கள் மூவரும் படிப்பில் சிறந்து விளங்கியவர்கள் எனும் தகவல் தற்போது வெளிவந்துள்ளது.
நம் நாட்டில் பெண்களின் கல்வி விழுக்காடு, வேலைக்கு செல்வோரின் எண்ணிக்கை என ஒருபக்கம் பெண்கள் சமூகம் வளர்ச்சியடைந்து வந்தாலும், பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறைகள், குறிப்பாக, குழந்தைத் திருமணம், வரதட்சணைக் கொடுமைகள் ஆகியவை ஓய்ந்தபாடில்லை.
ராஜஸ்தான் சகோதரிகள்
அந்த வகையில், ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூர் மாவட்டம், டுடு நகரில் மூன்று பெண்கள், அவர்களது இரண்டு குழந்தைகளின் சடலங்கள் முன்னதாக கிணற்றிலிருந்து கைப்பற்றப்பட்ட சம்பவம், நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இவர்கள் மூவரும், கலு மீனா, மம்தா மீனா, கமலேஷ் மீனா ஆகிய மூன்று சகோதரிகள் என்றும், குழந்தைகள் இருவரும் கலு தேவியின் குழந்தைகள் என்பதும், மம்தா, கமலேஷ் இருவரும் கர்ப்பிணிகள் என்பதும் கண்டறியப்பட்டது.
குடும்ப வன்முறை
25, 23, 20 வயது நிரம்பிய இந்த மூன்று சகோதரிகளும் மே 25-ஆம் தேதி காணாமல் போன நிலையில், இவர்கள் குறித்த விசாரணையில், மூன்று சகோதரிகளும் ஒரே குடும்பத்தில் திருமணமாகிச் சென்றவர்கள் என்பதும், மூவரும், குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டிருந்தனர் என்பதும் தெரிய வந்தது.
இவர்கள் மூவரும் நாள்தோறும் வரதட்சணைகோரி தங்கள் குடும்பத்தாரால் சித்திரவதை செய்யப்பட்டதாகவும், மூவரும் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்ததாகவும் கூறப்படும் நிலையில், மூவரின் கணவர்களும், மாமியாரும், கணவர்களின் சகோதரியும் தற்போது கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.
படிப்பில் சிறந்து விளங்கியவர்கள்
இந்த மூன்று சகோதரிகளும் குழந்தைத் திருமணம் செய்து கொடுக்கப்பட்ட நிலையில், மூவரும் சொந்தக் காலில் நிற்க விரும்பி, தங்கள் படிப்பைத் தொடர்ந்து வந்துள்ளனர்.
மூவரும் பிரியாமல் இருக்க ஒரே குடும்பத்தில் திருமணம் செய்துகொடுக்கப்பட்ட நிலையில், இவர்களது கணவர்கள் நரசிங், ஜெகதீஷ், முகேஷ் மூவரும் குடித்து விட்டு வந்து நாள்தோறும் அடித்து துன்புறுத்தியுள்ளனர்.
மேலும், படிப்பில் சிறந்து விளங்கிய மூவரையும் படிப்பை விட்டு விட்டு விவசாயத்தில் ஈடுபடும்படியும் வற்புறுத்தி துன்புறுத்தியுள்ளனர்.
மூவரில், திருமணத்துக்கு பின் படிப்பைத் தொடர்ந்து மம்தா, அரசு அதிகாரியாக விரும்பினார். மேலும், அவர் 12ஆம் வகுப்பில் 84 % மதிப்பெண்களை பெற்றிருந்தார். கலுதேவி பிஏ படிப்பின் இறுதி ஆண்டு படித்து வந்தார். அதேபோல இளைய சகோதரி கமலேஷ் மத்திய பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார்.
5 ஆண்டு கால சித்திரவதை
இந்நிலையில், இவர்கள் மூவரும் சுமார் ஐந்து ஆண்டு கால சித்திரவதையைத் தொடர்ந்து மனம் நொந்து தற்போது தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்திய குற்றப் பிரிவின் (NCRB) சமீபத்திய தரவுகளின்படி, இந்தியாவில் அதிக வரதட்சணைக் கொலைகள் நடக்கும் முதல் ஐந்து மாநிலங்களில் ராஜஸ்தான் இடம்பெற்றுள்ளது. 2021 ஆம் ஆண்டின் தரவுகளின்படி இந்தியாவில் வரதட்சணை தொடர்பான பிரச்சினைகளால் ஒவ்வொரு நாளும் 19 பெண்கள் உயிரிழக்கின்றனர். இந்த ஆண்டில் மொத்தம் 6,966 வரதட்சணை மரணங்கள் நிகழ்ந்துள்ளன. 7,045 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் ராஜஸ்தானில் மட்டும் 479 பேர் உயிரிழந்துள்ளனர்.