Rajasthan: ராஜஸ்தான் ஜோத்பூரில் திருமண நிகழ்ச்சியின் போது சிலிண்டர் வெடித்ததில், 2 பச்சிளம் குழந்தைகள் இறந்ததுடன் 60 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். 


ராஜஸ்தான் ஜோத்பூரில் ஒரு திருமண விழாவில் ஐந்து எரிவாயு சிலிண்டர்கள் வெடித்ததில் அறுபது பேர் படுகாயம் அடைந்தனர். இச்சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியர் கூறியதாவது, ‘வியாழக்கிழமை ஷெர்கர் அருகே உள்ள புங்ரா கிராமத்தில் நடந்தது. அந்த கிராமத்தில் உள்ள தக்த் சிங் என்பவரது வீட்டில் திருமணம் நடந்தது. திருமண ஊர்வலம் வீட்டை விட்டு வெளியேறும் நேரத்தில் திடீரென சிலிண்டர்கள் வெடித்து சிதறியது. 60 பேரில் காயமடைந்த 52 பேர் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டதாகவும், அதில் இரண்டு குழந்தைகள் உயிரிழந்ததாகவும், 49 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாகவும்’ மாவட்ட ஆட்சியர் ஹிமான்ஷு குப்தா தெரிவித்தார்.






மேலும் அவர் கூறுகையில், ‘ஒரு நோயாளி ஐசியுவில் இருக்கிறார், 10 பேர் 90% தீக்காயங்களுக்கு ஆளாகியுள்ளனர். பதினைந்து முதல் 20 பேருக்கு 50 சதவீதத்திற்கும் குறைவான தீக்காயங்கள் உள்ளன, மேலும் 17 பேர் சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பியுள்ளனர். காயமடைந்தவர்கள் ஷெர்கருக்குக் கொண்டு வரப்பட்டனர். இங்குள்ள மகாத்மா காந்தி மருத்துவமனையின் தீக்காய பிரிவு சிகிச்சைக்கு சிலர் அனுமதிக்கப்பட்டார்’. இச்சம்வம் குறித்து காவல்துறை சார்பில் கூறப்பட்டதாவது,  சுமார் 5 சிலிண்டர்கள் வெடித்து சிதறியதாக ரூரல் எஸ்பி அனில் கயல் தெரிவித்தார். சமையல் செய்யும் போது சிலிண்டர் கசிந்து தீப்பிடித்ததாகவும் அவர் கூறினார். மேலும், இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. திருமணத்தில் நடந்த இந்த விபத்தால் அந்த பகுதியே சோகத்தில் மூழ்கியுள்ளது.