ஆபாச படங்களை தயாரித்து சில செல்போன் ஆப்களுக்கு விற்பனை செய்ததாக பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ரா கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் அவரது பழைய ட்வீட்களை கிளறி எடுத்த ட்விட்டர் வாசிகள் அதனை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். நேற்றிரவு முதலே இணையத்தில் அதிகம் பேசப்படும் ராஜ்குந்த்ராவின் 2012ம் ஆண்டு ட்வீட்கள் இப்போது வைரலாக தொடங்கியுள்ளன. ஆபாச படம் குறித்தும் பாலியல் தொழில் குறித்தும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார். அந்த ட்வீட்டில், ''இந்தியாவில் நடிகர்கள் கிரிக்கெட் விளையாடுகிறார்கள். கிரிக்கெட் வீரர்கள் அரசியலுக்கு போகிறார்கள். அரசியல்வாதிகள் ஆபாச படம் பார்க்கிறார்கள். ஆபாசபட நடிகைகள் திரைப்படங்களில் நடிக்கிறார்கள். அப்படியான ஆபாச படம் Vs பாலியல் தொழில் என்பதை பற்றி யோசித்தால், கேமரா முன்பாக பாலியலுக்கு பணம் செலுத்துவது ஏன் சட்டப்பூர்வமானது இல்லை? அப்படியானால் பாலியல் தொழில், ஆபாச படத்தில் இருந்து எப்படி வேறுபட்டது?'' எனக் குறிப்பிட்டுள்ளார். அவரது ட்வீட்டை ஷேர் செய்யும் பலரும் இதுதான் ராஜ்குந்த்ராவின் நிலைபாடு என்றும், இதுதான் மும்பை போலீசாருக்கு பதிலோ என்றும் நகைச்சுவையாகவும், சீரியஸாகவும் பதிவிட்டு வருகின்றனர்.
முன்னதாக, ஆபாச படங்களை தயாரித்து சில செல்போன் ஆப்களுக்கு விற்பனை செய்ததாக மும்பை போலீசார் ராஜ்குந்த்ராவை நேற்றிரவு அதிரடியாக கைது செய்தனர். இந்த தகவலை மும்பை காவல் ஆணையர் ஹேமந்த் உறுதி செய்துள்ளார். இது குறித்து தெரிவித்துள்ள அவர், பிப்ரவரி 2021ம் ஆண்டு இது தொடர்பான வழக்கு பதியப்பட்டது. அதாவது ஆபாசப் படங்களை தயாரித்து அதனை சில ஆப்களுக்கு விற்பனை செய்வதாக புகார். அதன் விசாரணையில் சில சாட்சியங்கள் கிடைத்துள்ளன. அதனடிப்படையில் ராஜ்குந்த்ரா கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான மேலும் விசாரணை தொடர்கிறது என்றார்.
கைது செய்யப்பட்ட ராஜ்குந்த்ரா மீது, மோசடி, பொது இடங்களில் ஆபாசமான செயலில் ஈடுபடுவது மற்றும் ஆபாச புத்தகங்கள் அல்லது இலக்கியங்களை பகிரங்கமாக காட்சிப்படுத்துதல் அல்லது பரப்புதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ராஜ்குந்த்ரா மும்பை குற்றப்பிரிவுக்கு நேற்று அழைத்துச் செல்லப்பட்டார். வெளியான தகவலின்படி, திரைப்பட நடிகைகளை நிர்வாணமாக நடித்தவைத்து அதனை செல்போன் ஆப்களுக்கு விற்பனை செய்வது தொடர்பான புகாரில் ஏற்கெனவே 9 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த படங்கள் பணம் செலுத்தப்பட்டு பார்க்கப்பட்டும் செல்போன் ஆப்களில் வெளியாகின்றன என்கின்றனர் போலீசார்.