ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் இருந்து செங்கல்பட்டுக்கு ரயில்மூலம் கடத்தப்பட்ட 12 கிலோ கஞ்சா இன்று செங்கல்பட்டு பகுதியில் பறிமுதல் செய்யப்பட்டது.

 

ரயில்வே பாதுகாப்பு போலீஸார் 

 

செங்கல்பட்டு (Chengalpattu News): ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் இருந்து செங்கல்பட்டு வரை தினசரி விரைவு ரயில் வந்து செல்கிறது. இந்த ரயில் இன்று காலை  செங்கல்பட்டு ரயில் நிலையத்தை வந்தடைந்த போது, ரயிலில் ஏறி ஒவ்வொரு பெட்டியாக ரயில்வே பாதுகாப்பு போலீஸார் சோதனையிட்டனர். உதவி ஆய்வாளர் ராமதாஸ் தலைமையில் இந்த சோதனை நடந்தபோது , கேட்பாரற்ற நிலையில் இரண்டு பைகள் இருந்தன.



 

12 கிலோ கஞ்சா பொட்டலங்கள்

 

அதனை திறந்து பார்த்தபோது அதில் 6 பண்டல்களாக பேக்கிங் செய்த நிலையில் 12 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்தன. இதனைத் தொடர்ந்து இந்த கஞ்சா மீட்கப்பட்டு போதைப் பொருள் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இது தொடர்பாக போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.



 

ஆந்திராவில் இருந்து கஞ்சாவை கடத்தல்

 

செங்கல்பட்டு சென்னையின் புறநகர் பகுதியாக அமைந்துள்ளது. அதே போன்று பல்வேறு தொழில் நிறுவனங்கள் கல்லூரிகள் ஆகியவை இப்பகுதியில், இருப்பதால் அவர்களை மையமாக வைத்து கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்துகளின் வியாபாரம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஆந்திராவில் இருந்து கஞ்சாவை கடத்தி வர பாதுகாப்பான வழியாக, ரயிலை பயன்படுத்துவதாக சமீப காலமாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. அதே போன்று அவப்பொழுது பெரிய அளவில் கஞ்சா பறிமுதலும், ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 

 

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விசாரித்த பொழுது : தொடர்ந்து ரயில்வே வழியாகவும்,  கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக சென்னை புறநகர் பகுதிகளுக்கு , செங்கல்பட்டு வழியாக கஞ்சா கடத்தப்பட்டு வருவது தொடர் கதை ஆகியுள்ளது. எனவே செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் வருகின்ற அனைத்து ரயில் பெட்டிகளும் சோதனை செய்யப்படுகிறது. சந்தேகத்துக்கிடமான வகையில் இருக்கும் நபர்களையும் சோதனை செய்து வருகிறோம். இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.