பொள்ளாச்சி பாலியல் பலாத்கார வழக்கில் விசாரணை நடத்திய டிஎஸ்பி வீட்டில் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர்.


கடந்த 2019 ஆம் ஆண்டு கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகளைப் பாலியல் வன்கொடுமை செய்தது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி தமிழ்நாடு முழுவதும் அதிர்வலைகளை எழுப்பியது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவியின் சகோதரர் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, திருநாவுக்கரசு, சபரிராஜன், வசந்தகுமார் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர். சிபிசிஐடி காவல் துறையினர்விசாரணை செய்து வந்த நிலையில், இந்த வழக்கு விசாரணையானது சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது.





சிபிஐ அதிகாரிகள் இந்த வழக்கில் விசாரணை செய்து வந்த நிலையில், 2019 ஆம் ஆண்டு குற்ற பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்நிலையில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் பொள்ளாச்சியை சேர்ந்த அருளானந்தம், ஹேரென்பால், பாபு ஆகிய 3 பேரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை  தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், பாதிக்கப்பட்ட 9 பெண்கள் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்தனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பொள்ளாச்சியை சேர்ந்த  அருண்குமார் என்ற நபர் 9 ஆவது நபராக கைது செய்யப்பட்டார். பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கூடுதலாக 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், கூடுதல் குற்றப்பத்திரிகையை சிபிஐ அதிகாரிகள் கோவை மகளிர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.


குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் இப்போது சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.


இந்நிலையில், பொள்ளாச்சி வழக்கில் விசாரணை நடத்திய டிஎஸ்பி வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி வழக்கில் விசாரணை நடத்தியவர் டிஎஸ்பி ஜெயராமன். இவர் திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர். 1998ல் சார்பு ஆய்வாளராக திண்டுக்கல்லில் பணியைத் தொடங்கினார். 


தொடர்ந்து பல்வேறு பகுதிகளிலும் ஆய்வாளராகப் பணியாற்றி பதவி உயர்வு பெற்றும் நெல்லை, பொள்ளாச்சி போன்ற நகரங்களில் டிஎஸ்பியாக இருந்தார். அவர் பொள்ளாச்சியில் டிஎஸ்பியாக இருந்த போதுதான் அங்கு பாலியல் பலாத்கார சம்பவம் நடந்தது. அப்போது இவர் அந்த வழக்கைக் கையாண்ட விதத்துக்கு கண்டனங்கள் எழுந்தன. மக்கள் போராட்டத்தை அடுத்து அவர், தூத்துக்குடிக்கு மாற்றப்பட்டார். தூத்துக்குடி மாவட்ட க்ரைம் பிராஞ்ச் டிஎஸ்பியாக பணியாற்றி வருகிறார்.


இந்நிலையில் இன்று திண்டுக்கல் அசோக் நகரில் உள்ள அவரது வீட்டில் அதிகாலை முதல் லஞ்ச ஒழிப்புப் பிரிவு துறை டிஎஸ்பி நாகராஜ், ரூபா கீதாராணி தலைமையிலான போலீஸார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.