தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலாவுக்கு உதவிய சிறைச்சாலை அதிகாரியின் வீட்டில் போலீஸார் திடீர் சோதனை நடத்தினர்.


கடந்த 2014-ம் ஆண்டு, சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய 3 பேருக்கும் பெங்களூரு தனி நீதிமன்றம் தலா 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், தலா ரூ.10 கோடியே 10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கியது. 




சசிகலாவுக்கு சிறை தண்டனை விதித்து பெங்களூரு தனி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது. இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஜெயலலிதா மறைந்துவிட, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேருக்கும் சிறைத் தண்டனை உறுதியானது.
இதையடுத்து சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேரும் கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15-ஆம் தேதி பெங்களூரு பரப்பனஅக்ரஹார சிறையில் சரண் அடைந்தனர். 
அதைத்தொடர்ந்து 3 பேரும் அதே சிறையில் அடைக்கப்பட்டனர். சிறையில் சசிகலாவுக்கும், இளவரசிக்கும் ஒரே அறை ஒதுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் சசிகலாவின் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை காலம் கடந்த பிப்ரவரி மாதம் நிறைவடைய இருந்தது. ஆனால் ஏற்கெனவே அவர் சிறையில் இருந்த நாட்களை கணக்கிட்டு, சசிகலா ஜனவரி 27ல் விடுதலை செய்யப்பட்டார்.


சிறையில் வசதி:


சிறையில் அடைக்கப்பட்டிருந்த சசிகலா, இளவரசி உள்ளிட்டோருக்கு சிறையில் சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு உள்ளதாக கடந்த ஆண்டு சிறைத்துறை டிஐஜி-யாக இருந்த ரூபா குற்றஞ்சாட்டியிருந்தார். இதற்காக ரூ.2 கோடி வரை லஞ்சம் வாங்கப்பட்டுள்ளது என்றும் அவர் குற்றஞ்சாட்டியிருந்தார்.


சசிகலா, இளவரசிக்கு மட்டும் ஐந்து அறைகள், அறைகளுக்கு ஸ்க்ரீன்கள், தனியாக சமைக்க குக்கர் உள்ளிட்ட பாத்திரங்கள் இன்னும் பல வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதாகவும் புகார் முன்வைக்கப்பட்டது. மேலும், பார்வையாளர்களை சந்திக்க வசதி செய்து கொடுக்கப்பட்டதாகவும் புகார் எழுந்தது.


அதற்கு அப்போது பரப்பன அக்ரஹார சிறையில் கண்காணிப்பாளராக இருந்த கிருஷ்ணகுமார் உடந்தையாக இருந்ததாகக் கூறப்பட்டது. இதற்காக கிருஷ்ணகுமார் லஞ்சம் பெற்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது. 




திடீர் ரெய்டு:


இதற்கிடையில் கிருஷ்ணகுமார் பெலகாவி இண்டல்கா மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில், நேற்று சிறை வளாகத்தில் உள்ள கிருஷ்ணகுமாரின் வீட்டில் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் சோதனை நடத்தினர். அவரிடம் சிறையில் சசிகலா, இளவரசிக்கு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்ட வசதிகள் குறித்து துருவி துருவி விசாரணை நடத்தினர். பெங்களூருவில் இருந்து வந்திருந்த அதிகாரிகள் கிருஷ்ணகுமாரின் சொத்து மதிப்பு, வங்கி இருப்பு உள்ளிட்டவற்றை ஆராய்ந்தனர். கிருஷ்ணகுமார் உள்ளிட்ட மேலும் சில அதிகாரிகள் இந்த விசாரணையால் வசமாக சிக்குவார்கள் எனக் கூறப்படுகிறது.