இலங்கையில் பொருளாதார வீழ்ச்சி காரணமாக அனைத்து பொருட்களுமே தற்பொழுது விலை உயர்வு என்பது அதிகரித்து உள்ளது. எனவே தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு அவ்வப்போது கஞ்சா, மஞ்சள், ஏலக்காய், பூச்சிக்கொல்லி மருந்து, பீடி இலைகள் என அனைத்தும் தூத்துக்குடியில் இருந்து கடல் மார்க்கமாக இலங்கைக்கு அவ்வப்போது கடத்தல் சம்பவம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதனை தடுக்கும் வண்ணம் கடலோர பாதுகாப்பு போலீசார், கடலோர காவல்படையினர், கியூ பிரிவு போலீசாரும் தீவிரமான கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு தடுத்துக் கொண்டும் வருகின்றனர். ஆனாலும் தொடர்ந்தது விதவிதமான கடத்தல் சம்பவங்கள் நடந்து வருகின்றன.




இந்த நிலையில் தூத்துக்குடி புல்லாவெளி  கடற்கரையில் அதிகாலை 4 மணியளவில், க்யூ  பிரிவு காவல் ஆய்வாளர் விஜய அனிதா தலைமையில் உதவி ஆய்வாளர்கள் ஜீவமணி, வேல்ராஜ் தலைமை காவலர் ராமர், இருதயராஜ், இசக்கி, காவலர் பழனி பாலமுருகன் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது கடற்கரையில் நின்று கொண்டிருந்த மினி லாரியை சோதனையிட்டனர். 




அதில், சுமார் 1½ டன் எடையுள்ள பீடி இலைகள் இருந்தது. இதையடுத்து மினி லாரி மற்றும் பீடி இலைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். கைப்பற்றப்பட்ட பீடி இலைகளின் மதிப்பு சுமார் 7 லட்சத்து 50 ஆயிரம் ஆகும். இலங்கையில் இதன் மதிப்பு 45 லட்சம் ஆகும்.  அதன்  காரணமாக பீடி இலைகள் தொடர்ச்சியாக இலங்கைக்கு கடத்த முயற்சிக்கப்பட்டு வருகிறது. இந்த பீடி இலைகளை சட்ட விரோதமாக படகு மூலம் இலங்கைக்கு கடத்த முயன்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.




கடந்த சில தினங்களுக்கு முன்பாக தூத்துக்குடி மாவட்டம் மணப்பாட்டில் இருந்து 40 கடல்மைல் தொலைவில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டு இருந்த ஒரு படகை மடக்கி கடலோர காவல்படையினர் சோதனை செய்தனர். அந்த படகில் சாக்கு மூட்டைகளில் சுமார் 3½டன் பீடி இலைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தன. இதனை தொடர்ந்து படகில் இருந்த காட்வின், பிச்சையா, மில்டன், டார்ஜன், ரட்சகர், கிங் ஆகிய 6 பேரை மடக்கி பிடித்தனர். இதனை தொடர்ந்து படகு மற்றும் பீடி இலை மூட்டைகளை கடலோர காவல்படையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் பிடிபட்ட பீடி இலை, படகு மற்றும் 6 பேரையும் தூத்துக்குடிக்கு அழைத்து வந்து சுங்கத்துறையினரிடம் ஒப்படைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.