ஜி.நாகராஜன் தனது நூலில் மனிதர்களைப் பற்றிப் பொதுவான ஒரு கருத்தைக் குறிப்பிட்டிருப்பார். அது.. 'மனிதன், மகத்தான சல்லிப்பயல்!' என்பது.
அதுவும் தன்னால் அதிகாரம் செலுத்த முடியும் என்ற நிலையில் அவன் நிற்கும்போது தனது சல்லித்தனத்தை மகத்தாகவே வெளிப்படுத்துவான். அது சாதி ரீதியாகவோ, இன ரீதியாகவோ, பாலின ரீதியாகவோ, பொருளாதார ரீதியாகவோ பீறிக்கொண்டு வெளிப்படும். அந்த வக்கிரம் சில நேரங்களில் தன்னைவிட ஓரறிவு குறைவாகவே கொண்ட விலங்குகளின் மீதும் பாய்ந்துவிடுகிறது.
அப்படியொரு சல்லித்தனமான செயலைச் செய்திருக்கின்றனர் இரண்டு பெண்கள். பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவைச் சேர்ந்த சகோதரிகள் தான் இந்தக் கொடூர சம்பவத்தை அரங்கேற்றியவர்கள். தாங்கள் வளர்த்த நாய் வீட்டிலிருந்த குழந்தை ஒன்றை தாக்கிவிட அதற்காக அந்த நாயை ஸ்கூட்டரில் கட்டி தெருவெங்கு தரதரவென இழுத்துச் சென்றுள்ளனர். உள்ளூர்வாசிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் சற்றும் இரக்கமின்றி அந்தச் செயலை அவர்கள் செய்துள்ளனர். பக்ராநங்கல் அணைப் பகுதியில் நாயை அவிழ்த்துவிட்டு வருவதே அவர்களின் திட்டமாம். ஆனால் வழி நெடுக சாலையில் இழுத்துவரப்பட்ட நாய் உடல் முழுவதும் தோல் கிழிந்து ரத்தம் கொட்டிய நிலையில் காயம் காரணமாக அந்த நாய் உயிரிழந்துவிட்டது. 4 நாட்கள் உயிருக்குப் போராடி உயிரிழந்தது அந்த வாயில்லா ஜீவன். சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட இரண்டு பெண்களும் ஜாமீனில் வெளிவந்துவிட்டனர். அவர்கள் மீது விலங்குகளுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
சம்பவம் குறித்து காவல் அதிகாரி குர்ப்ரீத் பிந்தர் கூறுகையில், அந்த இரண்டு பெண்களும் அந்த நாயை வீட்டில் வளர்த்துவந்துள்ளனர். வீட்டிலுள்ள குழந்தையை அந்த நாய் தாக்கிவிடவே இவ்வாறு செய்ததாகத் தெரிகிறது. தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது. காவல்துறையிலிருந்து தப்பிக்க வண்டியின் நிறத்தை பெண்கள் மாற்றியதாகக் கூறப்படுகிறது. நாங்கள் வாகனத்தைக் கைப்பற்றிவிட்டோம். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றார்.
அதிர்ச்சித் தகவல்..
கொரோனா பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்ட பிறகு வீட்டு விலங்குகள், குறிப்பாக நாய்களுக்கு எதிரான கொடுமைகள் இரண்டு மடங்கு அதிகரித்துள்ளதாக ஒரு புள்ளிவிவரம் கூறுகின்றது. தெருநாய்கள் அதிகமுள்ள மும்பையில் எடுக்கப்பட்ட ஆய்வின்படி இது உறுதியாகியுள்ளது. கொரோனா பொதுமுடக்கத்தால் வேலை பறிபோய்விட்ட வெறுப்பு, செலவு அதிகரிப்பு போன்ற காரணங்களால்தான் விலங்குகளுக்கு எதிரான கொடுமைகள் கடந்த ஆண்டுகளை ஒப்பிடுகையில் இப்போது அதிகரித்திருக்கின்றன,என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.