தலித் இளைஞரைக் கொன்ற வழக்கில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேரை கைது செய்த புனே போலீஸார், தற்போது அதே குடும்பத்தைச் சேர்ந்த 19 வயது சிறுமியை கைது செய்துள்ளனர். முன்னதாக, இந்த வழக்கு தொடர்பாக சிறுமியின் தந்தை விஜய் பைகுடே (50), தாய் வந்தனா பைகுடே (40), சகோதரர் அஜய் (19), அவரது சகோதரரின் நண்பர் சாகர் ரத்தோட் (21) ஆகியோரை போலீஸார் கைது செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின் படி, 22 வயதான ப்ரதுன்ய பிரகாஷ் காம்ப்ளே மார்ச் 16 அன்று ஷிவானில் உள்ள தங்கத் பாட்டீல் நகரில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். அவரது உறவினர் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்ததை அடுத்து, போலீசார் தங்களது விசாரணையை தொடங்கினர். விசாரணையின் மூலம் தெரியவந்த செய்திகளை அறிக்கையாக தொகுத்து காவல்துறை வெளியிட்டனர். வெளியிடப்பட்ட அறிக்கைகளின்படி, அவர் பிரஜக்தா என்ற 19 வயது பெண்ணுடன் உறவு கொண்டிருந்தார் என்று தெரிவிக்கின்றனர். 



காம்ப்ளே தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்தவர் என்பதால், இவர்களது உறவுக்கு அந்த பெண்ணின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. எனவே அந்த நபர் மீது சந்தேகம் உள்ளதாக காவல்துறை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேர் மீதும் இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவு 302, 341 மற்றும் 34 மற்றும் ஆயுதச் சட்டத்தின் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இறந்தவர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், எஸ்சி & எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் பிரிவுகளும் சேர்க்கப்பட்டுள்ளன. வெளியாகியுள்ள செய்திக்குறிப்பின் படி சம்பவத்தன்று என்ன நடந்தது என்றால், பிரஜக்தா மார்ச் 16 அன்று காம்ப்ளேவுக்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்துள்ளார். அந்த அழைப்பில் அவரை நேரில் வந்து சந்திக்கும்படி கூறியுள்ளார். அப்படி அவர் தனது வீட்டிற்க்கு வந்தபோது, பிரஜக்தாவின் குடும்பத்தினர் அவரை கத்தியால் தாக்கி கொலை செய்துள்ளனர்.



ஏசிபி ருக்மணி கலண்டே கூறுகையில், "கொலை சதியில் பிரஜக்தாவும் ஈடுபட்டுள்ளதாக எங்களுக்கு விசாரணையில் தெரிய வந்தது. கொலை சம்பவம் நடப்பதற்கு முன் இறந்துபோன காம்ப்ளேவை அவர் தொலைபேசியில் அழைத்துள்ளார். அதனடிப்படையில் நாங்கள் பிரஜக்தாவை கைது செய்து விசாரித்தோம், மேலும் இந்த வழக்கில் ஐபிசியின் 120 பி (குற்ற சதி) பிரிவையும் சேர்த்துள்ளோம். மேலும் விசாரணைக்காக பிரஜக்தாவை மார்ச் 24 வரை போலீஸ் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது." என்று கூறினார். இதில் ஸ்வாரஸ்யமான திருப்புமுனை என்னவென்றால், கொலை செய்யப்பட்ட காம்ப்ளேவின்மீது ஏற்கனவே இரண்டு குற்ற வழக்குகள் இருக்கின்றன. அது இரண்டும் பிரஜக்தாவின் குடும்பத்தினர் கொடுத்தது. அவர் மீது பாலியல் பலாத்கார வழக்கு பதிவு செய்ததை அடுத்து 2021 ஆம் ஆண்டு அவர் கைது செய்யப்பட்டார் என்றும் தெரியவந்தது. அந்த வழக்கு பொய் வழக்காக இருக்கும் என்று காவல் துறையினர் சந்தேகித்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவத்தை அடுத்து பிரஜக்தா தற்கொலைக்கு முயன்றதாகவும் அவரது பெற்றோர்கள் தெரிவித்தனர்.