புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே இடையபட்டி கிராமம் காசியாபுரத்தை சேர்ந்தவர் கணேசன். விவசாயியான இவர், நேற்று முன்தினம் இரவு காசியாபுரம் அருகே உள்ள கூவாட்டுப்பட்டி அய்யனார் கோவில் திருவிழாவிற்கு குடும்பத்துடன் சென்றுள்ளார். பின்னர் திருவிழா முடிந்து வீடு திரும்பினர். அப்போது வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதையடுத்து அவர் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 2 பவுன் நகை, ரூ.20 ஆயிரத்தை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதேபோல கணேசன் வீட்டை அடுத்துள்ள மதி என்பவரது வீட்டில் இருந்த பீரோவை உடைத்து 2 பவுன் நகை, ரூ.5 ஆயிரத்தை மர்மநபர்கள் திருடி சென்றுள்ளனர். மேலும் வீ்ட்டில் இருந்த ஆவணங்களையும் மர்மநபர்கள் எடுத்து அருகில் உள்ள புதருக்குள் வீசி சென்றுள்ளனர். இதுகுறித்த தகவலின் பேரில் இலுப்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் நகை-பணத்தை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். 




இதேபோல் கீரனூர் அருகே ஒடுக்கூரை சேர்ந்தவர் மோகன். இவரது மனைவி ராதா (வயது 34). நேற்று முன்தினம் மதியம் மோகன் மற்றும் அவரது குழந்தைகள் விறகு வெட்டுவதற்காக காட்டு பகுதிக்கு சென்றனர். ராதா புதுக்கோட்டைக்கு சென்றிருந்தார். வீட்டில் மோகனின் தந்தை சின்னையா மட்டும் இருந்துள்ளார். இந்நிலையில் சின்னையா வீட்டின் முன்பக்க கதவை பூட்டிவிட்டு, பின் பக்க கதவை திறந்து வைத்து தூங்கி உள்ளார். இதையடுத்து வெளிேய சென்றவர்கள் வீட்டிற்கு திரும்பி வந்தனர். அப்போது வீட்டின் பீரோ உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. பின்னர் பீரோவை பார்த்த போது, அதில் இருந்த 10 பவுன் நகைகள் மற்றும் ரூ.10 ஆயிரத்தை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. மேலும் வீட்டில் இருந்த செல்போனையும் எடுத்து சென்றுள்ளனர். இதுகுறித்து ராதா கீரனூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகைகள் பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்குப்பதிவு செய்து நகை-பணத்தை திருடி சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார். பட்டப்பகலில் வீட்டுக்குள் புகுந்து பீரோவை உடைத்து அதில் இருந்த 10 பவுன் நகைகள் மற்றும் பணத்தை திருடி சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 




புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக தொடர் திருட்டு, வழிப்பறி, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மாவட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்  நடைபெற்றது. அதில் தொடர் திருட்டு, கொள்ளை சம்பவத்தில் ஈடுபடுபவர்களை உடனடியாக கைது செய்து சட்ட ரீதியான தண்டனையை பெற்று தர வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் 24 மணி நேரமும் மாவட்டம் முழுவதும் ரோந்து பணியிலும், பாதுகாப்பு பணியிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். ஆனால் சில மர்ம நபர்கள் குறிப்பாக ஒரு சில பகுதிகளில் தொடர்ந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். குறிப்பாக கடந்த சில தினங்களுக்கு முன்பு இலுப்பூரில் அரசு மருத்துவர் வீட்டில் சுமார் 200 பவுன் தங்க நகைகள் கொள்ளை போனதும், ஒரே நாளில் 4 இடங்களில் கொள்ளை சம்பவம் நடந்ததும் குறிப்பிடத்தக்கது. இதனால் இலுப்பூர் காவல் சரக பகுதியில் கொள்ளையர்களின் நடமாட்டம் அதிகம் உள்ளதால் பொதுமக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட காவல் சூப்பிரண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண