புதுச்சேரி: புதுச்சேரி கூடப்பாக்கத்தைச் சேர்ந்தவர் அருண் பாண்டியன் என்ஜினீயர். இவர் தன்னுடைய செல்போனில் இன்ஸ்டாகிராமில் வந்த ஒரு லிங்கை பார்த்து. அதன் உள்ளே சென்றுள்ளார். அப்போது ஆன்லைனில் வருகின்ற சினிமாக்களை பார்த்து படத்தைப் பற்றிய மதிப்பெண்ணை குறிப்பிட்டால் முதலீடு செய்யும் பணத்திற்கு உடனடியாக 10 சதவீதம் வருமானம் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனை நம்பி அவர் இன்ஸ்டாகிராம் லிங்க் உள்ளே சென்று ஒரு படத்தை பார்த்து அதற்கான மதிப்பெண் கொடுத்தவுடன் இவர் முதலீடு செய்த ரூ.10 ஆயிரத்துக்கு 10 சதவீதம் கூடுதலாக உடனடியாக ரூ.11ஆயிரம் அனுப்பி உள்ளார்கள்.
தொடர்ந்து அவர் தனது பணத்தை செலுத்தி, பல்வேறு படங்களை பார்த்து இவர் அதற்கான மதிப்பெண்ணை கொடுத்துக்கொண்டே இருந்தார் ரூ.31 லட்சம் வரை அதில் முதலீடு செய்து விட்டு பணத்தை திரும்ப எடுக்க முயற்சித்தபோது, அவருடைய வங்கி கணக்கில் பணம் எதுவும் இல்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்தார். இதுகுறித்து அவர் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் கீர்த்தி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
இதனை தொடர்ந்து சைபர் கிரைம் போலீசார் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:- பொதுமக்கள் தங்கள் மொபைல்ஃபோனில் குறுஞ்செய்தி அல்லது வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் போன்றவற்றில் வருகிற லிங்க்கில் உள்ளே சென்று பார்க்கவேண்டாம். அப்படி அந்த லிங்க் மூலமாக நீங்கள் உள்ளே செல்லும்பொழுது உங்களுடைய செல்போன் ஹேக் செய்யப்படுகிறது, உங்கள் செல்போனில் இருக்கின்ற அனைத்து தகவல்களும் இணைய வழி மோசடிக்காரர்களால் திருடப்பட்டுவிடும், மேலும் கவர்ச்சிகரமான அதிக சம்பளத்தின் கூடிய வெளிநாட்டு வேலை வாய்ப்பு அறிவிப்புகள், நாங்கள் சொல்வதில் முதலீடு செய்தால் அன்றைய தினமே 10 சதவீதம் லாபம் கொடுக்கப்படும் கவர்ச்சிகரமான அதிக சம்பளத்தில் உள்நாடு மற்றும் வெளிநாடு வேலை வாய்ப்புகள் போன்ற பெரும்பாலானவை இணைய வழி மோசடிக்காரர்ககள் பொதுமக்களை ஏமாற்ற தற்போதும் கையாளப்படும் யுக்திகளாகும்.
பொதுமக்கள் இது போன்ற மோசடிக்காரர்கள் நம்பி பணத்தை இழக்க வேண்டாம். இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.