புதுச்சேரி : காதலிக்க மறுத்த பெண்ணை ஒரு தலை காதலன் பெட்ரோல் ஊற்றி கொளுத்திய விவகாரத்தில் 85 சதவீத தீக்காயங்களுடன் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.

Continues below advertisement

புதுச்சேரியில் பயங்கரம்: காதலிக்க மறுத்த இளம்பெண் பெட்ரோல் ஊற்றி எரிப்பு -  சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

புதுச்சேரி அண்ணா சாலை பகுதியில் ஒருதலைக் காதலால் இளம்பெண் ஒருவர் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 85 சதவீத தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிய அந்தப் பெண், தீவிர சிகிச்சைக்குப் பலனின்றி இன்று உயிரிழந்தார்.

புதுச்சேரி நேதாஜி நகர் பகுதியைச் சேர்ந்த ஷர்மிளா, அங்குள்ள ஒரு தனியார் ஜவுளி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவரை வாணாரப்பேட்டை இந்திரா நகரைச் சேர்ந்த ஜோசப் என்பவர் கடந்த சில காலமாக ஒருதலையாகக் காதலித்து வந்துள்ளார்.

Continues below advertisement

ஜோசப்பிற்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், மனைவியைப் பிரிந்து விவாகரத்து பெற்றுத் தனியாக வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில், ஷர்மிளாவைத் தனைக் காதலிக்குமாறு ஜோசப் தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார்.

கடந்த ஒரு மாத காலமாக ஷர்மிளா செல்லும் இடமெல்லாம் பின் தொடர்ந்து சென்று ஜோசப் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஷர்மிளா, இது குறித்து பெரிய கடை காவல் நிலையம் மற்றும் ஒதியஞ்சாலை காவல் நிலையம் ஆகியவற்றில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், இந்த விபரீத சம்பவம் அரங்கேறியுள்ளது.

நேற்று இரவு 9 மணி அளவில் ஷர்மிளா பணி முடிந்து அண்ணா சிலை அருகே உள்ள உழவர் சந்தை வழியாக வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு பெட்ரோல் கேனுடன் மறைந்திருந்த ஜோசப், ஷர்மிளாவை வழிமறித்து மீண்டும் காதலை ஏற்குமாறு வற்புறுத்தியுள்ளார்.

இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த ஜோசப் தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை ஷர்மிளா மீது ஊற்றித் தீ வைத்துள்ளார். உடல் முழுவதும் தீப்பற்றி எரிய, வலியால் துடித்த ஷர்மிளா சுமார் 100 அடி தூரம் அலறியபடி ஓடிச் சென்று 

அங்கிருந்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து உடனடியாக ஷர்மிளாவை மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். உடல் முழுவதும் 85 சதவீத தீக்காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் அவருக்குத் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், சுமார் 15 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு இன்று சிகிச்சை பலனின்றி ஷர்மிளா பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்ட ஜோசப் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நடந்த இந்தச் சம்பவம் புதுச்சேரியில் பெண்களின் பாதுகாப்பு குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தப்பி ஓடிய குற்றவாளியைக் கைது செய்ய போலீஸார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.