புதுச்சேரி மாநிலம் திருபுவனையில் தனியார் கம்பெனியில் பணிபுரிந்து கொண்டே வாடகை வீட்டில் கஞ்சா செடிகளை வளர்த்த வடமாநில இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வடமாநில தொழிலாளர்கள்:
திருபுவனை அருகே உள்ள திருவாண்டார்கோவில் ஏரிக்கரை சாலையில் வட மாநில தொழிலாளர்கள் வாடகை வீட்டில் தங்கி இருந்து அப்பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலைகளில் பணிபுரிந்து வருகிறார்கள். இந்நிலையில் வட மாநில தொழிலாளர்கள் குடி இருக்கும் பகுதியில் அதிகப்படியான இளைஞர்கள் வந்து செல்வதாகவும், சில நேரங்களில் அங்கே இருக்கும் இளைஞர்கள் சிலர் போதையில் இருப்பதாகவும், அப்பகுதி சேர்ந்த சிலர் திருபுவனை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.
அதனை தொடர்ந்து புதுச்சேரி வடக்கு பிரிவு எஸ்.பி வம்சித ரெட்டி உத்தரவின் பேரில், இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், மேற்பார்வையில் சப் இன்ஸ்பெக்டர் ராஜசேகர், தலைமையில் குற்றவியல் போலீசார் சத்தியமூர்த்தி, அசோகன் ஆகியோர் அப்பகுதியில் பணிபுரிந்து வந்த வடமாநில இளைஞர்களை தீவிரமாக கண்காணித்து வந்தனர். அதனைத் தொடர்ந்து திருபுவனை வழியாக திரவாண்டார்கோவில் ஏரிக்கரைக்கு செல்லும் சாலையில் ஒரு வீட்டில் வட மாநில இளைஞர்கள் இருவர் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றனர். அவர்களைப் பிடித்து விசாரணை நடத்தியதில் வாடகை வீட்டின் பின்புறம் இருந்த சிறிய தோட்டத்தில் பல்வேறு பூக்கள் உள்ள செடிகளின் நடுவில், கஞ்சா விதைகளை தூவி அதனை செடிகளாக வளர்த்து. அதில் வரும் கஞ்சா இலைகளை பதப்படுத்தி விற்பனை செய்து வந்தது, தெரிய வந்தது.
வீட்டிலேயே கஞ்சா வளர்ப்பு:
அதனைத் தொடர்ந்து போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தியதில் ஒடிசா அருகே உள்ள மயூரா பஞ்சன் கிராமத்தைச் சேர்ந்த ராதா மோகனின் மகன் சர்பன்குமார்நிகாரா,40 அதே பகுதியைச் சேர்ந்த தசராபத்ரா, 27 ஆகிய இருவரும் சேர்ந்து அங்குள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து கொண்டு இந்த கஞ்சா செடிகளை வளர்த்து விற்பனை செய்ததை போலீசார் விசாரணையில் கண்டுபிடித்து அவர்களி டம் இருந்து கைப்பற்றப்பட்ட 30 கிராம் மதிப்புள்ள ஒரு அடி நீளம் வளர்ந்த கஞ்சா செடிகள், 100 கிராம் மதிப்பிலான கஞ்சாவை கைப்பற்றி விசாரணை நடத்தி வழக்கு பதிவு செய்து இருவரையும் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் திருபுவனை பகுதியில் பல்வேறு தொழிற்சாலைகளில் பணிபுரிந்து வரும் வடமாநில தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை கண்காணிக்க போலீஸ் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
என்ன செய்ய வேண்டும்?
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்