புதுச்சேரி முத்துப்பிள்ளைபாளையம் ராதாநகர் 3-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ஸ்ரீதர். அவரது மகன் விஷால் (வயது 26). என்ஜினீயர். இவர் நேற்று நள்ளிரவில் தனது இருசக்கர வாகனத்தில் கடற்கரைக்கு செல்வதற்காக லெபுர்தனே வீதியில் வந்து கொண்டிருந்தார். அப்போது சிலர் ரோட்டில் நின்று கொண்டு அந்த வழியாக சென்ற வாகனங்களை மறித்து ரகளையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சென்ற விஷாலை அங்கு நின்று கொண்டிருந்த நபர்களில் ஒருவர் அடிக்கப்போவது போல் கையை ஓங்கினார். அவரிடம் சிக்காமல் வேகமாக ஓட்டி சென்ற போது எதிர்பாராத விதமாக நிலைதடுமாறி சாலையோரம் இருந்த மரத்தில் இருசக்கர வாகனம்  மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு விஷால் பலத்த காயம் அடைந்தார். அவரை அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக புதுவை அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி விஷால் பரிதாபமாக இறந்தார்.


இதுகுறித்து தகவல் அறிந்த அவரது நண்பர்கள், உறவினர்கள்  ஒதியஞ்சாலை காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். விஷாலின் இறப்பிற்கு  காரணமானவர்களை கைது செய்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தினார்கள். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்வதில் போக்குவரத்து போலீசார்- ஒதியஞ்சாலை போலீசார் இடையே குழப்பம் நீடித்து வந்தது. இறுதியில் கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் ஒதியஞ்சாலை போலீசார் 304-வது பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்தனர் . விஷாலிடம் பிரச்சினை செய்யும் விதமாக செயல்பட்ட 5 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். நடுரோட்டில் ரகளையில் ஈடுபட்டவர்களால் இருசக்கர வாகனத்தில்  சென்ற என்ஜினீயர் மரத்தில் மோதி பலியான சம்பவம் கண்காணிப்பு கேமராவில் பதிவான வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.


 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண