ஜிப்மர் டாக்டரிடம் ஆன்லைன் மூலம் ரூ.10 லட்சம் மோசடி செய்தவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். புதுச்சேரி ஜிப்மரில் டாக்டராக பணியாற்றி வருபவர் வெங்கட ரமணய்யா என்ற ரமண நாயுடு (வயது 36). இவர் கோலாஸ் நகரில் வசித்து வருகிறார். இவர் ஆன்லைனில் வர்த்தகம் தொடர்பான விவரங்களை செல்போனில் பார்வையிட்டுள்ளார். அப்போது குஜராத் நிறுவனம் ஒன்று அந்த நிறுவனத்தில் ரூ.10 லட்சம் முதலீடு செய்தால் ரூ.12 லட்சம் அமெரிக்க டாலர் கிடைக்கும் என்று விளம்பரப்படுத்தி இருந்தது. இதைத்தொடர்ந்து அதில் குறிப்பிட்டுள்ள எண்ணை வெங்கட ரமணய்யா தொடர்பு கொண்டார்.


அப்போது அவருடன் மொகல், ஹரிஷ்பாய் ஆகியோர் பேசியுள்ளனர். அவர்கள் தங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்யுமாறு ஆசைவார்த்தை கூறியுள்ளனர். இதை நம்பி வெங்கட ரமணய்யா கடந்த ஜூலை மாதம் ரூ.10 லட்சத்தை முதலீடு செய்துள்ளார். ஆனால் அவருக்கு ரூ.12 லட்சம் அமெரிக்க டாலர் கிடைக்கவில்லை. இதனால் வெங்கட ரமணய்யா ஏற்கனவே பேசியவர்களுடன் பேச செல்போன் எண்ணை தொடர்பு கொள்ள முயன்றார்.  ஆனால் அந்த செல்போன் எண் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.


இதனால் ஏமாற்றப்பட்டதை அறிந்த வெங்கட ரமணய்யா புதுவை சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் காவல் ஆய்வாளர் மனோஜ் மோசடி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். அந்த நபர்கள் பணத்தை பல்வேறு வங்கி கணக்குகளுக்கு மாற்றி மோசடி செய்ததும் விசாரணையில் தெரியவந்தது. அவர்கள் போலியான கணக்கு வைத்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்களை கைது செய்ய சைபர் கிரைம் போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். புதுவையில் சைபர் கிரைம் காவல்நிலையம் அமைக்கப்பட்டுள்ள நிலையில் முதல் வழக்காக இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.