புதுச்சேரி உசுடு அருகே உள்ள ராமநாதபுரத்தில் தனியார் தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது. இதன் உரிமையாளரிடம் சுகன் என்ற ரவுடி மாமூல் கேட்டு வந்துள்ளனர். ஆனால், அவர் தர முடியாது என மறுப்பு தெரிவித்துள்ளார். இந்த நிலையில் அவரை மிரட்ட முடிவு செய்த சுகன் தனது கூட்டாளியுடன் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். அப்போது, தொழிற்சாலை வெளியே நின்றிருந்த உரிமையாளரை மிரட்டும் நோக்கில் சுகன் நாட்டு வெடிகுண்டு வீச முயற்சி செய்தார். ஆனால், அந்த வெடிகுண்டு தவறுதலாக ரவுடியின் காலுக்கு கீழ் விழுந்து வெடித்தது. இதில் அருகில் இருந்த தொழிற்சாலை உரிமையாளர் மற்றும் ஊழியருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இதுகுறித்து அந்த பகுதியில் இருந்தவர்கள் வில்லியனூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவலர்கள் ரத்த வெள்ளத்தில் துடித்துடித்த தொழிற்சாலை உரிமையாளர் மற்றும் அவரது ஊழியரை மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். வெடிகுண்டு வீசிய ரவுடி சுகன் தனது காலில் நாட்டு வெடிகுண்டு வெடித்து பலத்த காயம் ஏற்பட்ட நிலையிலும், அவர் தனது கூட்டாளியுடன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அவர்களைப் பிடிக்க போலீஸார் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது, ரவுடி சுகன் சிகிச்சைக்காக காலாப்பட்டு பீம்ஸ் மருத்துவமனைக்குச் சென்றதாக காவலர்களுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு விரைந்து சென்ற போலீஸார், ரவுடி சுகனை மடக்கிப்பிடித்து கைது செய்தனர். மேலும் நாட்டு வெடிகுண்டு வீச்சு சம்பந்தமாக வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
புதுச்சேரியில் தொழிற்சாலை உரிமையாளரை மிரட்டும் நோக்கில் எடுத்துவரப்பட்ட நாட்டு வெடிகுண்டு ரவுடி காலிலேயே வெடித்த சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் புதுச்சேரி முழுவதும் அண்ணா சாலை மற்றும் ஒதியன்சாலை பகுதிகளில் முதுநிலை காவல் கண்காணிப்பாளர் நாரா சைதன்யா தலைமையில் போலீசார் வாகன சோதனை மற்றும் மதுபானக்கடைள், தங்கும் விடுதிகள உள்ளிட்ட இடங்களில் ரவுடிகளின் நடமாட்டம் குறித்து சோதனை செய்து வருகின்றனர். அதேபோல் பெரிய கடை காவல் நிலைய சரக்கத்திற்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் முதுநிலை காவல் கண்காணிப்பாளர் தலைமையில் தீவிர சோதனையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.