விழுப்புரம்: நேற்று இரவு விழுப்புரம் - நாகப்பட்டினம் நான்கு வழிச்சாலையில் லாரிகளில் இருந்த ஓட்டுனர்களை வெட்டி பணம் மற்றும் செல்போன் பறித்த புதுவை மாநில ரவுடி மொட்டை விஜயை கடலூரில் எஸ்பி ஜெயகுமார் என்கவுன்டர் செய்தார்.
லாரி டிரைவர்களை வெட்டி பணம் பறித்த போதை கும்பல்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஆலஞ்சேரியை சேர்ந்தவர் மணிமாறன் (வயது 34) லாரி டிரைவர். இவர் நேற்று இரவு புதுச்சேரியில் இருந்து மயிலாடுதுறைக்கு எம்.சாண்ட் மணல் ஏற்றிக்கொண்டு விழுப்புரம் -நாகப்பட்டினம் சாலையில் சென்று கொண்டிருந்தார். நள்ளிரவு நேரத்தில் தூக்கம் வந்ததால் கடலூர் அடுத்த பெரியப்பட்டு பகுதியில் லாரியை ஓரமாக நிறுத்தி தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத வாலிபர்கள் திடீரென்று லாரிக்குள் ஏறி மணிமாறன் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டினர்.
அக்கும்பல் செல்போன், பணம் மற்றும் பொருட்கள் கொடுக்க வேண்டும் என மணிமாறனை மிரட்டினர். அப்போது என்னிடம் பணம் எதுவும் இல்லை என கூறிய போது திடீரென்று சரமாரியாக மணிமாறன் தலை மற்றும் உடலில் மர்ம நபர்கள் வெட்டினார்கள். இதில் மணிமாறன் அலறி துடித்து கத்திக் கொண்டிருந்தபோது அவ்வழியாக வாகனங்கள் வந்தவுடன் மர்மகும்பல் அங்கிருந்து தப்பித்து ஓடினார்கள்.
பின்னர் மற்ற வாகனத்தில் இருந்தவர்கள் மணிமாறனை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மயிலாடுதுறை மாவட்டம் ஒதவந்தான்குடியை சேர்ந்தவர் பிரபு (வயது 45). நேற்று மாலை திண்டிவனத்தில் இருந்து சீர்காழிக்கு எம்.சாண்ட் ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தபோது பெரியப்பட்டு பகுதியில் அவரும் வாகனத்தை ஓரத்தில் நிறுத்தி தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது மர்ம கும்பல் லாரிக்குள் ஏறி பிரபுவிடம் இருந்த 5 ஆயிரம் பணம் மற்றும் செல்போன் ஆகியவற்றை திருடி கொண்டு இறங்கியபோது சத்தம் கேட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த பிரபு உடனடியாக எழுந்து பார்த்தபோது அவசர அவசரமாக இறங்கி சாலையில் ஓடும்போது அவ்வழியாக வந்த மற்றொரு லாரி டிரைவர் இவர்களை பார்த்து லாரி மூலம் துரத்தினர்.
கத்தியை எடுத்து வெட்ட வந்த மர்ம நபர்கள்
அப்போது அதிலிருந்து ஒரு வாலிபர் தன்னிடம் இருந்து கத்தியை எடுத்து வெட்ட மீண்டும் வந்தபோது லாரி டிரைவர் விரட்டியதால் அங்கிருந்து தப்பித்து ஓடினார்கள். ஆனால் இவருக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை. இதனை தொடர்ந்து பிரபு அவசர அவசரமாக அங்கிருந்து லாரி மூலம் தனது சொந்த ஊருக்கு சென்றார்.
விவசாய நிலத்திற்கு சென்றவரை வழிமறித்து வெட்டிய மர்ம கும்பல்
கடலூர் அடுத்த எம். புதூரை சேர்ந்தவர் காளிமுத்து (50). இவர் தன்னுடைய விவசாய நிலத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது 3 பைக்கில் வந்த 9 வாலிபர்கள் காளிமுத்துவை வழிமறித்தனர். பின்னர் அவரிடமிருந்து செல்போன், 100 ரூபாய் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்து கொண்டிருந்தபோது அதிலிருந்து ஒரு வாலிபர் சரமாரியாக காளிமுத்து தலை மற்றும் உடலில் வெட்டினார்.
இதில் மயக்கம் அடைந்த காளிமுத்து சாலையில் விழுந்தார். அப்போது ஒரு வாலிபர் சதீஷ் என்ற பெயரை அழைத்து இவரை விடக்கூடாது என கூறிய நிலையில் அவ்வழியாக வந்த வாகனங்களை பார்த்து அங்கிருந்து தப்பித்து சென்றனர். 3 பேரையும் கத்தியால் வெட்டிய கும்பல் கடும் போதையில் இருந்ததாக தெரிவித்தனர். மேலும் மணிமாறன் மற்றும் காளிமுத்துவை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விழுப்புரம்-நாகப்பட்டினம் சாலையில் ஒரே இரவில் போதை ஆசாமிகள் டிரைவர்களை சரமாரியாக வெட்டி செல்போன் மற்றும் பணத்தை பறித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
வழிப்பறியில் ஈடுபட்ட மொட்டை விஜய் என்கவுன்டர்
இந்த நிலையில் கடலூர் மாவட்டதில் பல்வேறு இடங்களில் சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது வழிப்பறியில் ஈடுபட்ட கும்பலை சேர்ந்த ரவுடி புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த மொட்டை விஜய் எம். புதூர் பகுதியில் உள்ளார் வந்த தகவலை தொடர்ந்து அவரை பிடிக்க சென்ற போலீசாரை விஜய் அரிவாளால் வெட்டிய நிலையில் போலீசார் தற்காத்துக்கொள்ள அவர் மீது துப்பாக்கி சூடு நடத்தியதில் ரவுடி மொட்டை விஜய் உயிரிழந்தார். இவரி மீது 30க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலவையில் உள்ளது.