புதுச்சேரி ஒதியஞ்சாலை காவல் நிலையத்துக்குப்பட்ட வாணரப்பேட்டை காளியம்மன் தோப்பு பகுதியில் உப்பனாற்றை கடந்து செல்லும் ரயில் பாதை உள்ளது. பயனற்ற இந்த பாதை ஒதுக்குபுறமாக இருக்கிறது. இதன் அருகில் நேற்று பயங்கர சத்தத்துடன் நாட்டு வெடிகுண்டு ஒன்று வெடித்துச் சிதறியது. சத்தம் கேட்டு, அதிர்ச்சியில் அப்பகுதி மக்கள் வீடுகளில் இருந்து வெளியே ஓடி வந்தபோது புகை மூட்டமாக இருந்தது. இது குறித்து ஒதியஞ்சாலை போலீசுக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், குண்டு வெடித்த பகுதியை பார்வையிட்டு, விசாரணை நடத்தினர். இரவு நேரம் என்பதால் விசாரணை நடத்த முடியவில்லை. இதையடுத்து, மீண்டும் இன்று காலையில் சம்மந்தப்பட்ட பாதையில் போலீசார் சோதனையிட்டனர். அப்போது உப்பளம் தொகுதி எம்எல்ஏ அனிபால் கென்னடி அங்கு வந்து விபரம் கேட்டறிந்தார். முதல்கட்ட விசாரணையில், அதேபகுதியை சேர்ந்த ரவுடிகள் சிலர், தாங்கள் தயாரித்த நாட்டு வெடிகுண்டு சரியாக வெடிக்கிறதா என சோதனை செய்து பார்த்தது தெரியவந்துள்ளது.
சம்பவ இடத்தில் போலீசார் ஆய்வு செய்து விசாரித்ததில், வண்ணாரப் பேட்டையை சேர்ந்த ரவுடிகள் 4 பேர் நாட்டு வெடி குண்டு தயாரித்து, அது வெடிக்கிறதா என்று பரிசோதனை செய்து பார்த்தது தெரியவந்தது. நான்கு பேரையும் கைது செய்த போலீசார், எதற்காக வெடி குண்டு தயாரித்தார்கள் என்பது பற்றி விசாரித்து வருகின்றனர். நாட்டு வெடிகுண்டை வீசி சோதனை செய்தவர்கள் யார்? யாரை கொல்ல வெடிகுண்டுகளை தயாரித்தனர் ? என்பது குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். புதுச்சேரியில் நாட்டு வெடிகுண்டு தயாரித்த ரவுடிகள், அதை ரயில் தண்டவாளம் அருகில் வீசி சோதித்துப் பார்த்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், புதுச்சேரி கரிக்கலாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் தாடி அய்யனார். ரவுடியான இவர் மீது கொலை, வழிப்பறி, கஞ்சா மற்றும் கொலை முயற்சி வழக்குகள் உள்ளன. குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட இவர், ஒரு மாதத்துக்கு முன்பு சிறையில் இருந்து வெளியே வந்தார். இருந்த போதிலும், 42 நாட்கள் அவர் ஊருக்குள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. அதனால் அவரது ஊருக்கு அருகில் 2 கி.மீ தொலைவில் தமிழ்நாடு எல்லையில் இருக்கும் கீழ் குமாரமங்கலம் மலட்டாறு ஓரத்தில் மீன் குட்டை பகுதியில் தங்கியிருந்தார். தாடி அய்யனாருக்கும், கீழ் குமாரமங்கலம் ரவுடி தேவா, கரிக்கலம்பாக்கம் ஜோசப் ஆகியோருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று அதிகாலை 2 மணியளவில் தூங்கிக் கொண்டிருந்த தாடி அய்யனாரையும் அவரது நண்பர் வேல்முருகனையும், தேவா மற்றும் அவரது ஆதரவாளர்கள் வெட்டினர். மேலும், நாட்டு வெடிகுண்டையும் வீசியுள்ளனர். புதுச்சேரியில் இந்த ஆண்டு நாட்டுவெடி குண்டு தயாரித்து தாக்குதல் செய்வது அதிகரித்துள்ளது