புதுச்சேரி : புதுச்சேரியில் அதிக மதிப்பு மிக்க பொருள் ஒன்றை பார்சலில் அனுப்புவதாக கூறி 5 பேர் சைபர் மோசடி கும்பலிடம் ரூ. 1.15 லட்சம் இழந்துள்ளனர்.
மோசடி கும்பலிடம் ரூ. 1.15 லட்சம் இழப்பு
புதுச்சேரி வைத்திக்குப்பத்தை சேர்ந்த நபரை, பேஸ்புக் மற்றும் வாட்ஸ் ஆப் மூலம் தொடர்பு கொண்டு, மர்மநபர் நட்பாக பேசி பழகியுள்ளார். பின், அதிக மதிப்பு மிக்க பொருள் ஒன்றை பார்சலில் அனுப்புவதாகவும், அதனை பணம் கொடுத்து பெற்றுக்கொள்ளும்படி தெரிவித்தார். இதையடுத்து, சில தினங்களுக்கு பின், அவரது வீட்டிற்கு வந்த பார்சலை, ரூ. 93 ஆயிரத்து 500 செலுத்தி பெற்றார். ஆனால், பார்சலில் மர்மநபர் தெரிவித்த பொருள் இல்லை. அதன் பிறகே மோசடி கும்பலிடம் பணத்தை இழந்தது தெரிய வந்தது. இதேபோல், அரியாங்குப்பத்தை சேர்ந்தவர் 11 ஆயிரத்து 300, லாஸ்பேட்டையை சேர்ந்தவர் 5 ஆயிரம், மற்றும் 4 ஆயிரம், கரிக்கலாம்பாக்கத்தை சேர்ந்தவர் 2 ஆயிரம் என, 5 பேர் மோசடி கும்பலிடம் ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 800 ரூபாய் ஏமாந்துள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
ஆன்லைன் முதலீடு மோசடி கும்பல்
வாட்ஸ் ஆப், இன்ஸ் டாகிராம், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஓ.ஏ.ஜி., ஆப்பில் 19 ஆயிரத்து 500 முதலீடு செய்தால் 700 ரூபாய் நாள் ஒன்றுக்கு லாபம் தருவதாக விளம்பரம் பரவியது. இதைகண்ட புதுச்சேரியை சேர்ந்தவர்கள் விளம்பரத்தில் இருந்த மொபைல் எண்ணை தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். எதிர்முனையில் பேசிய மர்மநபர் ஆன்லைன் முதலீடு குறித்து விளக்கம் அளித்து ஆசைவார்த்தை கூறியுள்ளார்.
இதைநம்பிய சிலர் மர்ம நபர் தெரிவித்த ஆன்லைனில் பணத்தை முதலீடு செய்துள்ளனர். அதன்பின் அவர்களுக்கு தெரிவித்தபடி, முதலீடு செய்த தொகைக்கு ஏற்ப லாபப்பணம் வந்துள்ளது. இதையடுத்து, லாபப்பணம் பெற்றவர்கள் தங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களையும் அந்த ஆப்பில் முதலீடு செய்ய வைத்துள்ளனர்.
இதற்கிடையே, அதிக அளவில் பொதுமக்கள் முதலீடு செய்தபின், முதலீடு செய்ததற்கான லாபப்பணம் ஏதுவும் அவர்களுக்கு வரவில்லை. அதன் பிறகே சைபர் மோசடி கும்பலிடம் பணத்தை இழந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக இதுவரையில் 700க்கும் மேற்பட்டோர் பல கோடி ரூபாய் முதலீடு செய்து ஏமாந்துள்ளதாக சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
இதுகுறித்து புதுச்சேரி சைபர் கிரைம் சீனியர் எஸ்.பி., நித்யா ராதாகிருஷ்ணன் கூறுகையில்,
ஆன்லைனில் வரும் விளம்பரத்தை நம்பி யாரும் மொபைல் ஆப்களில் முதலீடு செய்து பணத்தை ஏமாற வேண்டாம். பெரும்பாலும் இது போன்ற மோசடி ஆப்கள் வெளிநாட்டில் இருந்து இயக்கப்படுகிறது. கடந்த சில மாதங்களாக இதுபோன்ற பல்வேறு ஆப்களில் மக்கள் முதலீடு செய்து பல கோடி ரூபாய் இழந்து வருவது தெரிவித்தும், அதிக லாபத்திற்கு ஆசைப்பட்டு மக்கள் மீண்டும் மீண்டும் பணத்தை முதலீடு செய்து இழந்து வருவது தொடர்கதையாக உள்ளது. ஆகவே, மொபைல் ஆப்கள் மூலம் ஆன்லைன் முதலீடு செய்வதை தவிர்க்க வேண்டும் என்றார்.
வங்கி OTP எண் சொல்லாதீங்க
மேலும் வங்கி கணக்கு எண், ஓடிபி எண் போன்றவற்றையும் தெரிவிக்கக்கூடாது. மோசடி நடந்த உடன் சைபர் கிரைம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தால் மோசடியாக எடுக்கப்பட்ட பணத்தை முடக்க இயலும். மீட்கவும் இயலும். மேலும் ஆன்லைன் ஜாப், டாஸ்க் என்று பணம் கட்டும் எந்த செயல்களிலும் ஈடுபடக்கூடாது.
இதேபோல் ஆன்லைன் டிரேடிங் ஆப் என்று பல்வேறு வகையிலும் மோசடிகள் நடந்து வருகிறது. இதில் எந்த வகையிலும் மக்கள் சிக்கிக் கொள்ளக்கூடாது என்பதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க மேற்கொள்ளப்படுகிறது