வில்லியனூர் அருகே கஞ்சா விற்பதில் ஏற்பட்ட தகராறில் பிரபல ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


புதுச்சேரி வில்லியனூர் அருகே உள்ள ஆரியபாளையம் சங்கராபரணி ஆற்றங்கரையோரம் நேற்று மாலை 4 மணி அளவில் சுமார் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் சடலமாக இருந்தார். இதுபற்றி அப்பகுதியை சேர்ந்தவர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து மேற்கு பகுதி காவல் கண்காணிப்பாளர் ஜிந்தா கோதண்டராமன், வில்லியனூர் ஆய்வாளர் வேலைய்யன், சப்-இன்ஸ்பெக்டர் வேலு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு வெட்டுக்காயங்களுடன் பிணமாக கிடந்த வாலிபரின் உடலை பார்வையிட்டனர். அவரது கழுத்தில் பின்பக்கமாக வெட்டுக்காயம் இருந்தது. எனவே அவர் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து வாலிபரின் உடலை பிரேத பரிசோதனைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தனர்.


இந்த கொலை தொடர்பாக போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். விசாரணையில், கொலை செய்யப்பட்டு கிடந்தவர் வில்லியனூர் கணுவாப்பேட் பகுதியை சேர்ந்த பழனிராஜா என்பவரின் மகன் பிரவீன் என்கிற பிரவீன்குமார் (வயது 24) என்பது தெரியவந்தது. ரவுடியான இவர் மீது கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. கணுவாப்பேட்டை பகுதியில் உள்ள பிரபல ரவுடி ஒருவருக்கும், பிரவீன்குமாருக்கும் கஞ்சா விற்பது தொடர்பாக பிரச்சினை இருந்துள்ளது. இதுதொடர்பாக சமாதானம் பேச அழைத்து மதுகுடிக்க வைத்து பிரவீன்குமாரை அரிவாளால் வெட்டி படுகொலை செய்தது தெரியவந்துள்ளது. இந்த பயங்கர கொலை தொடர்பாக சந்தேகத்தின் பேரில் 3 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கஞ்சா விற்பனை தகராறில் ரவுடி கொலை செய்யப்பட்ட சம்பவம் வில்லியனூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.